2013-04-15 16:47:26

திருத்தந்தை: செவிமடுப்பதன் மூலம் பிறக்கும் விசுவாசம், அதனை எடுத்துரைப்பதன் மூலம் வலிமைபெறுகிறது


ஏப்.15,2013. பல்வேறு துன்பங்களை அனுபவித்தாலும், இயேசுவின் வார்த்தைகளை உலகுக்கு எடுத்துரைத்த முதல் சீடர்கள் குறித்து இஞ்ஞாயிறு முதல் வாசகம் எடுத்துரைத்ததை மேற்கோள் காட்டி, புனித பவுல் பசிலிக்காப் பேராலயத்தில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், நாம் வாழும் சுற்றுப்புறங்களில் இயேசுவின் வார்த்தைகளை எடுத்துரைக்க நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியை முன்வைத்தார்.
தான் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றபின் முதன்முறையாக உரோம் நகர் புனித பவுல் பசிலிக்காவுக்குச் சென்று, அங்கு விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை, செவிமடுப்பதன் மூலம் பிறக்கும் விசுவாசம், அதனை எடுத்துரைப்பதன் மூலம் வலிமைபெறுகிறது என்று கூறினார்.
புனித பேதுருவும் ஏனையத் திருத்தூதர்களும் வார்த்தைகளால் மட்டும் போதிக்கவில்லை, எடுத்துக்காட்டான தங்கள் வாழ்வு மூலமும் போதித்தார்கள் என தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய பாப்பிறை, நாமும் எவ்வாறு கிறிஸ்துவுக்கு சாட்சி பகர்கிறோம் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
வார்த்தைகளுக்கும் வாழ்வுக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கும்போது திருஅவையின் நம்பகத்தன்மை குறைவுபடுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் அவர்.
அவரது பாதையில் நடக்க நம்மை அழைத்த இயேசுவை நாம் ஏற்றுக்கொள்வதன் மூலமே இவையெல்லாம் நமக்கு சாத்தியமாகும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வு மூலம் இயேசுவுக்குச் சாட்சி பகர்வோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

ஆதாரம் - வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.