2013-04-13 16:31:31

கர்தினால் டர்க்சன் : அமைதி, மனித மாண்பை ஏற்பதிலிருந்து மலருவது


ஏப்.13,2013. மனிதரின் மாண்பிலிருந்து மலரும் அமைதி ஒவ்வொருவருக்கும் அவசியமானது என்று திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் கூறினார்.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் அருளப்பரின் “அவனியில் அமைதி” (Pacem in Terris) என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி வாஷிங்டனிலுள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் இவ்வாரத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் டர்க்சன் இவ்வாறு கூறினார்.
நாம் அடிக்கடி அமைதி பற்றிக் கேட்கிறோம், ஆனால் அமைதி என்றால் என்ன என்பது குறித்து பலவேளைகளில் தவறாகப் புரிந்துகொள்கிறோம் என்று பேசிய கர்தினால் டர்க்சன், சண்டையும் கலவரங்களும் இன்றி இருப்பது அமைதி அல்ல, ஆனால் அமைதி கடவுளிடமிருந்து வரும் ஒரு கொடை என்று கூறினார்.
இக்கொடையை இப்பூமியில் மனிதர் ஏற்றுக்கொள்ளும்போது அது உண்மையாகிறது, எனவே அமைதி மனிதரிலிருந்து தொடங்குகிறது என்றும் உரையாற்றிய கர்தினால் டர்க்சன், கடவுளே அமைதி, படைப்பனைத்தும் அமைதிக்காக ஏங்குகிறது என்றும் கூறினார்.
உலகில் பனிப்போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், 1963ம் ஆண்டில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் அருளப்பர் “Pacem in Terris” (அவனியில் அமைதி) என்ற திருமடலை வெளியிட்டார்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.