2013-04-13 16:29:42

உலகளாவியத் திருஅவையின் நிர்வாகத்தில் உதவுவதற்கென 8 கர்தினால்கள் கொண்ட ஆலோசனை குழுவை நியமித்துள்ளார் திருத்தந்தை


ஏப்.13,2013. உலகளாவியத் திருஅவையின் நிர்வாகத்தில் தனக்கு ஆலோசனை சொல்வதற்கு உதவியாக இந்தியாவின் மும்பை கர்தினால் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த எட்டு கர்தினால்கள் குழு ஒன்றை இச்சனிக்கிழமையன்று உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடச் செயலகம் இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், திருஅவையின் 266வது திருத்தந்தையாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கிளேவ் அவை தொடங்குவதற்கு முன்னர் இடம்பெற்ற கர்தினால்களின் பொதுக் கூட்டங்களில் பரிந்துரைக்கப்பட்டதற்கிணங்க, திருத்தந்தை இந்தக் கர்தினால்கள் குழுவை உருவாக்கத் தீர்மானித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
திருப்பீடத் தலைமையகம் குறித்த Pastor bonus என்ற அப்போஸ்தலிக்க சட்ட அமைப்பை மறுபரிசீலனை செய்வதற்கும் இக்கர்தினால்கள் குழு உதவும் எனவும் திருப்பீடச் செயலகத்தின் அறிக்கை கூறுகிறது.
மத்திய அமெரிக்க நாடான Honduras நாட்டு Tegucigalpa பேராயர் கர்தினால் Oscar Andrés Maradiaga Rodríguez S.D.B., அவர்கள் இக்கர்தினால்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். இக்குழுவின் முதல் கூட்டம் வருகிற அக்டோபர் 1 முதல் 3 வரை இடம்பெறும்.
இக்கர்தினால்கள் குழுவில்,
வத்திக்கான் நாட்டின் நிர்வாகத் தலைவர் கர்தினால் Giuseppe Bertello,
தென் அமெரிக்க நாடான Chileயின் Santiagoவின் ஓய்வுபெற்ற பேராயர் கர்தினால் Francisco Javier Errazuriz Ossa,
இந்தியாவின் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்,
ஜெர்மனியின் München மற்றும் Freising பேராயர் கர்தினால் Reinhard Marx,
ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயகக் குடியரசின் Kinshasa பேராயர் கர்தினால் Laurent Monswengo Pasinya,
அமெரிக்க ஐக்கிய நாட்டின் Boston பேராயர் கர்தினால் Sean Patrick O’Malley,
ஆஸ்திரேலியாவின் சிட்னி பேராயர் கர்தினால் George Pell,
Honduras நாட்டு Tegucigalpa பேராயர் கர்தினால் Oscar Andrés Maradiaga Rodríguez S.D.B..
ஆகிய 8 கர்தினால்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவின் செயலராக இத்தாலியின் அல்பானோ ஆயர் Marcello Semeraro நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.