2013-04-12 16:06:03

கத்தோலிக்க அருள் பணியாளருக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது


ஏப்.12,2013. கத்தோலிக்க அருள் பணியாளர் Emil Kapaun இராணுவ உடையில் இருந்த ஒரு நல்ல மேய்ப்பர் என்று அமெரிக்க அரசுத் தலைவர் Barack Obama கூறினார்.
அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு மத்தியில் குருத்துவப் பணிகளை ஆற்றிய அருள் பணியாளர் Kapaun அவர்களுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தினருக்கு வழங்கப்படும் Medal of Honour என்ற மிக உயரிய விருதை இவ்வியாழனன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் வழங்கியபோது, அரசுத் தலைவர் Obama இவ்வாறு கூறினார்.
1950களில் கொரியாவில் நிகழ்ந்த போரில் மெய்ப்புப் பணிகள் செய்தவர் அருள் பணியாளர் Kapaun. போர்க்களத்தில் பணி செய்தாலும், ஆயுதங்களைத் தொடாமல், ஆன்மீகப் பணிகளை மட்டுமே இவர் ஆற்றிவந்தார்.
1950ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கப் படையினரை சீன, மற்றும் வடகொரிய படைகள் சூழ்ந்தபோது, அவ்விடத்தைவிட்டு அகன்று செல்ல தனக்குக் கிடைத்த வாய்ப்பை ஏற்க மறுத்து, அமெரிக்கப் படை வீரர்களுடன் தங்கி அவர்களுடன் கைதியாகப் பிடிபட்ட அருள் பணியாளர் Kapaun அவர்கள் காட்டிய வீரத்தைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
1916ம் ஆண்டு பிறந்த அருள் பணியாளர் Kapaun, 1951ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி தனது 35வது வயதில் ஒரு போர் கைதியாக மரணமடைந்தார். அவரது எடுத்துக்காட்டான வாழ்வை முன்னிட்டு, அவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தும் முயற்சிகள் 2009ம் ஆண்டு துவக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : ICN / CNS








All the contents on this site are copyrighted ©.