2013-04-12 16:06:39

இயேசு சபையின் புலம் பெயர்ந்தோர் பணிக்குழுவுக்கும், ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பிற்கும் இடையே ஒப்பந்தம்


ஏப்.12,2013. போர், பொருளாதாரம், இயற்கைச் சீரழிவு ஆகிய பல காரணங்களால் சொந்த நாடுகளிலிருந்து புலம் பெயரும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் மக்களுக்கு கல்வி வழங்கும் ஒரு திட்டத்தில், ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பிற்கும், இயேசு சபையின் புலம் பெயர்ந்தோர் பணிக்குழுவுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புலம் பெயர்வதால் சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு கணணி வழியாக தொடர்புவழி கல்வி வழங்கும் திட்டம் இவர்கள் மத்தியில் எதிர்காலத் தலைவர்களை உருவாக்க உதவும் என்று இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் அகில உலகத் தலைவர் அருள் பணியாளர் Peter Balleis வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
இயேசு சபையின் முன்னாள் உலகத் தலைவர் Pedro Aruppe அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட JRS எனப்படும் இயேசு சபையினரின் புலம் பெயர்ந்தோர் பணிக்குழு, 50 நாடுகளில் 7,00,000க்கும் அதிகமான புலம் பெயர்ந்தோர் மத்தியில் பணி புரிகிறது.
கல்விப் பணிக்கு முக்கியத்துவம் தரும் இயேசு சபையில், புலம் பெயர்ந்தோரிடையிலும் 2,80,000 குழந்தைகளுக்குக் கல்வி வசதிகள் அளித்துவரும் JRSன் பணிகளில் ஒன்றாக 2010ம் ஆண்டு கணணிவழி கல்வி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆப்ரிக்க நாடுகளில் கட்டாயமாகப் புலம் பெயரும் நிலைக்குச் தள்ளப்பட்டுள்ள பல்லாயிரம் பேர், அமெரிக்காவின் Denver நகரில் உள்ள Regis பல்கலைக் கழகத்துடன் கணணிவழிக் கல்வி பெற்று வருகின்றனர் என்று JRS தலைவர் Peter Balleis கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.