2013-04-11 11:54:20

அன்னைமரியா திருத்தலங்கள் – Knock அன்னைமரியா, அயர்லாந்து


ஏப்.10,2013. அயர்லாந்து நாட்டின் மேற்கிலுள்ள Mayo மாவட்டத்தில் 130 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறிய கிராமமாக இருந்த Knock, இன்று ஆண்டுதோறும் உலகெங்கிலுமிருந்து பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகள் செல்லும் புனித இடமாக மாறியுள்ளது. 1879ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி மாலை 8 மணியளவில் Knockல் அன்னைமரியா காட்சி கொடுத்ததே இதற்கு காரணம். 1879ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி வியாழக்கிழமை. அன்று மாலை 8 மணியளவில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. Knockன் புனித திருமுழுக்கு யோவான் பங்குக் கோவிலின் வளாகச் சுவரின் தென்பகுதியில் அன்னைமரியாவும், புனித வளனும், நற்செய்தியாளர் புனித யோவானும் 15 பேருக்கு ஏறக்குறைய 2 மணிநேரங்கள் காட்சி கொடுத்தனர். ஆண்கள், பெண்கள், சிறார், முதியவர் என 5 வயது முதல் 75 வயது வரையுள்ள 15 பேர் கொட்டும் மழையில் நனைந்துகொண்டே இரண்டு மணி நேரத்துக்கு அக்காட்சியைக் பார்த்துக்கொண்டும் செபமாலை செபித்துக்கொண்டும் இருந்தனர். மழை பெய்து கொண்டிருந்தாலும், அக்காட்சியில் தோன்றிய மூவர் மட்டும் மழையில் நனையாமல் இருந்தனர் என்று, இக்காட்சியைப் பார்த்தவர்கள் சாட்சி சொல்லியிருக்கின்றனர். இம்மூவர் தோன்றிய இடத்துக்கு அருகிலே இடதுபக்கத்தில் ஒரு பலிபீடமும், அதில் ஒரு திருச்சிலுவையும், செம்மறி ஆட்டின் உருவமும், அதைச் சுற்றி வானதூதர்கள் சூழ்ந்து துதிபாடிக் கொண்டிருந்ததையும் அவர்கள் பார்த்தனர்.

இக்காட்சியின்போது அன்னைமரியா, வெள்ளை நிறத்தில் நீண்ட அங்கியுடன் தலையில் ஒளிரும் மகுடத்துடன் காணப்பட்டார். தலையில் வைத்திருந்த மகுடம் நெற்றியைத் தொட்டுக் கொண்டிருந்தது. மகுடம் நெற்றியைத் தொட்ட இடத்தில் சுடர்விடும் ஓர் அழகான மலர்ந்த தங்க ரோஜாவை வைத்திருந்தார் அன்னை மரியா. அவரது கண்கள், ஆழ்ந்த செபத்தில் இருக்கும் தோற்றத்தில் இருந்தன. கைகளைக் குவித்து விண்ணைநோக்கி அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அன்னையின் வலது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த புனித வளன், அன்னையின் பக்கம் திரும்பி அவருக்கு மரியாதை செலுத்துவதுபோல் இருந்தார். புனித வளனும் வெள்ளை அங்கி அணிந்திருந்தார். நற்செய்தியாளர் புனித யோவான் அன்னையின் இடது பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். அவரும் வெள்ளைநிற உடையில் ஓர் ஆயரைப்போல் தலையில் தொப்பி வைத்திருந்தார். அவர் தனது இடது கரத்தில் திறந்த புத்தகத்தைப் பிடித்திருந்தார். இவர் போதிப்பதுபோல் தோன்றினார். இம்மூவரும் காட்சி கொடுத்த நேரம் இரவாக இருந்தாலும் அவர்கள் மட்டும் மிகவும் பிரகாசமான ஒளியில் இருந்தனர். இரண்டு மணி நேரத்துக்கு அவர்கள் அதே இடத்தில் இருந்தனர். அவர்கள் காட்சி கொடுத்துக்கொண்டிருந்த இடம் மட்டும் மழையில் நனையாமல் இருந்தது. இவ்வாறு அக்காட்சியைப் பார்த்தவர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

இக்காட்சியைக் கண்ட 15 பேரில் ஒருவரான Bridget Trench என்பவர் உடனடியாக அன்னைமரியாவின் பாதங்களை முத்திச் செய்யச் சென்றார். ஆனால் அவர் அந்தச் சுவரைத்தான் முத்தி செய்திருக்கிறார். அவரே சொல்லியுள்ளார் – நான் எனது கண்களால் மித் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருந்த உருவங்களை எனது கரங்களால் உணர முடியவில்லையே என்று. அன்னைமரியா, புனித வளன், நற்செய்தியாளர் புனித யோவான் ஆகிய மூவரையும், பலிபீடத்தையும் காட்சியில் கண்ட அந்த 15 பேரும் விவரித்ததை வைத்து 1879ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி Tuam பேராயர் மேதகு John MacHale ஒரு விசாரணைக் குழுவை உருவாக்கினார். அயர்லாந்தின் வரலாற்று நிபுணர்கள் Ulick Bourke, James Waldron, இன்னும் Ballyhaunis பங்குத்தந்தையும் உயர்மறைமாவட்ட தியாக்கோனுமான அருள்திரு Bartholomew Aloyisius Cavanagh எனச் சிலர் இக்குழுவில் இருந்தனர். இக்குழு காட்சி கண்ட அனைவரையும் தீர விசாரணை நடத்தியதில் அக்காட்சி நம்பக்கூடியதாகவும், திருப்திகரமானதாகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 1936ம் ஆண்டில் இரண்டாவது விசாரணைக் குழு உருவாக்கப்பட்டது. அந்த 15 பேரில் உயிரோடு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் அக்காட்சி உண்மை என உறுதி செய்யப்பட்டது.

பிரான்சின் லூர்து. போர்த்துக்கல்லின் பாத்திமா போன்ற இடங்களில் அன்னைமரியா காட்சி கொடுத்தபோது அந்நாடுகளில் கலாச்சார, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. அதேபோல் அயர்லாந்தின் Knockல் அன்னைமரியா காட்சி கொடுத்தபோது அந்நாட்டின் பாரம்பரியச் சமூகத்துக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. 1870களில் அயர்லாந்து நாடு மாபெரும் எழுச்சியை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. 1840களில் அயர்லாந்தைக் கடுமையாய்த் தாக்கிய கடும் பஞ்சத்தின் கடைசி எதிரொலி 1870களில் தெரிந்தது. அயர்லாந்தின் கிராம வாழ்வை மாற்றும் நிலச்சீர்சிருத்தங்கள் இடம்பெற்றன. இது வன்முறைக்கும் இட்டுச் சென்றது. ஏழை கிராமத்தினர் கஷ்டப்பட்டனர். எனவே இத்தகைய சூழலில் அன்னைமரியாவும் புனித வளனும் காட்சி கொடுத்தது, அயர்லாந்து சமுதாயத்தின் உறுதியையும், மரபுத்தன்மையையும் காப்பதற்கு விடுக்கும் அடையாளமாக இருந்ததாகக் கருதப்படுகிறது. இறைவனின் தாயான மரியா, சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு ஆதரவாய் இருப்பதை வெளிப்படுத்தவே இக்காட்சி எனவும் நம்பப்பட்டது.

இக்காட்சிக்குப் பின்னர் Knockன் புகழ் பரவத்தொடங்கியது. இவ்வூருக்கு இரயில்பாதை அமைக்கப்பட்டது. தினத்தாள்கள் செய்திகளை வெளியிட்டன. பன்னாட்டு ஊடகங்களும் இதில் கவனம் செலுத்தின. அயர்லாந்து மொழியில் Knock என்றால் குன்று என்று பொருள். எனவே இவ்விடத்தில் கட்டப்பட்டுள்ள அன்னைமரியா திருத்தலம், அயர்லாந்து மொழியில் Cnoc Mhuire அதாவது மரியின் குன்று என அழைக்கப்படுகிறது. அயர்லாந்தின் அரசியாக நோக்கப்படும் Knock அன்னைமரியாவுக்கென புதிய பசிலிக்கா 1967ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதில் பத்தாயிரம்பேர் ஒரே நேரத்தில் அமரலாம். Knock திருத்தலம் 20ம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் முக்கிய அன்னைமரியா திருத்தலங்களில் ஒன்றாக விளங்கத் தொடங்கியது. இன்று உலகின் முக்கிய அன்னைமரியா திருத்தலங்களில் ஒன்றாகவும் Knock அன்னைமரியா திருத்தலம் விளங்குகிறது. புனித வளன் மற்றும் நற்செய்தியாளர் புனித யோவானுடன் அன்னைமரியா காட்சி கொடுத்ததின் நூற்றாண்டு விழாவையொட்டி 1979ம் ஆண்டில் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களும் Knock அன்னைமரியா திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டார்.

அன்பர்களே, இறைவனின் தாயான மரியா, சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு ஆதரவாய் இருப்பதை வெளிப்படுத்தவே Knock என்ற சிறிய கிராமத்தில் அக்காலத்தில் காட்சி கொடுத்தார் என நம்பப்படுகிறது. அன்னைமரியா தனிமையிலும், துன்பத்திலும் வாடும் மக்களுக்கு என்றும் ஆதரவாக இருந்து அரவணைக்கிறார். அன்னையை நாடிச் சென்றவர்கள் ஒருபோதும் வெறுங்கையராய்த் திரும்பியதில்லை.







All the contents on this site are copyrighted ©.