2013-04-10 16:22:26

ஏப்ரல் 11, 2013. . கற்றனைத்தூறும்...... நெல்லிக்கனி


“கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்துடன், சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் மன்னரான அதியமானுக்கு தர, அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதைவிட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அதியமான் ஔவைக்கு கொடுத்ததாக இலக்கியத்தில் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நெல்லிக்கனியின் மருத்துவ பயன்கள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அனைவருக்கும் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தே உள்ளன.
உயிர்ச்சத்தான வைட்டமின் ‘சி’ சத்து நெல்லிக்கனியில் நிறைந்துள்ளதால் இந்திய மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். வயதுமுதிர்ச்சி காரணமாக வரும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.
வாழ்நாளை நீடிக்கச் செய்யும் காயகல்ப மூலிகையாகும். நடுத்தர ஆரஞ்சுப் பழம் ஒன்றில் இருப்பதைப் போல இருபது மடங்கு வைட்டமின் ‘சி’ சத்து இதில் அடங்கியிருக்கிறது. காய்கள் காய்ந்தாலும், கொதிக்க வைத்தாலும் இச்சத்து அழிவதில்லை. நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்புச் சத்து, தாதுப்பொருள், இரும்பு, நிக்கோடினிக் அமிலம் முதலியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தை நெல்லிக்காய் விலக்குகிறது. இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். உடல் அசதி மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும், முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.
உணவு செரிமானமின்மைக்கு எப்படி பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று, நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது.
நெல்லிக்காய் குரோமியம் கொண்டுள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். இன்சுலின் சுரப்பதை தூண்டுகிறது. உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கும். இரும்புச் சத்து மிகுந்து காணப்படுவதால், இதனை உட்கொண்டால் சருமத்திற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் மிகவும் சிறந்தது. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். கல்லீரலின் செயல்பாட்டை முறையாக நடத்துகிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும். நெல்லிக்கனி உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.








All the contents on this site are copyrighted ©.