2013-04-09 16:03:44

திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரைத் தீர்ப்பிடவோ, புறங்கூறவோ கூடாது


ஏப்.09,2013. கிறிஸ்தவ சமூகத்தில் அமைதியைக் கொண்டுவரும் தூயஆவி, அதன் உறுப்பினர்கள் தாழ்ச்சியுள்ளவர்களாக, பிறரைப் பற்றித் தவறாகப் பேசாதவர்களாக இருப்பதற்குக் கற்றுத் தருகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் இச்செவ்வாயன்று கூறினார்.
இச்செவ்வாய் காலை புனித மார்த்தா இல்லத்தில் திருப்பலியில் பங்கு கொண்ட வத்திக்கான் நலவாழ்வு அலுவலகத்தினர் மற்றும் வத்திக்கான் நிர்வாகப் பணியில் இருப்போருக்கு ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முதல் கிறிஸ்தவர்களைப் புதிய வாழ்வுக்குள் கொண்டுவந்த தூய ஆவியின் வழியாக அவர்கள் ஒரே இதயமும் ஒரே மனமும் கொண்டிருந்தனர், இவர்கள் இக்காலக் கிறிஸ்தவச் சமூகத்துக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றார்கள் என்றுரைத்தார் திருத்தந்தை.
இயேசுவுக்கும் நிக்கதேமுவுக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்தும் விளக்கியத் திருத்தந்தை, மனிதர் தூய ஆவியால் புதிதாகப் பிறக்க முடியும் என்றும், திருமுழுக்கில் பெற்ற புதிய வாழ்வை, தூய ஆவியின் உதவியுடன் நாம் வளர்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
பிறரைப்பற்றி குறை பேசும்போது, என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் என்ற திருத்தந்தை, இவை தூயஆவி நம்மில் வருவதை விரும்பாத தீயவனின் சோதனைகள் என்றும் கூறிய அவர், இந்தப் போராட்டங்கள் பங்குகள், குடும்பங்கள், நண்பர்கள் என எல்லா இடங்களிலும் எப்போதும் காணப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.