2013-04-09 16:03:01

திருத்தந்தை பிரான்சிஸ், பான் கி மூன் சந்திப்பு


ஏப்.09,2013. ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் இச்செவ்வாயன்று சந்தித்து, நியுயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும், இச்சந்திப்பின்போது உலகில் இடம்பெறும் சண்டைகள், அதனால் ஏற்பட்டுள்ள அவசர மனிதாபிமான நெருக்கடிகள், குறிப்பாக அமைதி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சிரியா, கொரியத் தீபகற்பம் மற்றும் ஆப்ரிக்கா குறித்து இவ்விருவரும் உரையாடினர் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
உலக அமைதி, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மனித சமுதாயத்தின் நல்வாழ்வை ஊக்குவித்தல் ஆகிய ஐ.நா.வின் பணிகளில் திருப்பீடம் மையமாக இருந்து செயல்பட்டுவருதைத் திருத்தந்தையிடம் தெரிவித்தார் ஐ.நா.பொதுச் செயலர்.
மேலும், கத்தோலிக்கத் திருஅவை தனது தனித்துவத்துக்கு ஒத்திணங்கிச் செல்லும் வகையில், ஒருங்கிணைந்த மனித மாண்பை ஊக்குவிப்பது உட்பட அது செய்துவரும் பணிகளையும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் நேரடிச் செயலர் பேராயர் Antoine Camilleri ஆகியோரையும் சந்தித்தார் ஐ.நா.பொதுச்செயலர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.