2013-04-08 16:01:19

வாரம் ஓர் அலசல் – மனது வை... மனது வை.... மனது வை....


ஏப்.08,2013 RealAudioMP3 . அது ஒரு நடுத்தரக் குடும்பம். அக்குடும்பத்தில் ஆஸ்திக்கு ஓர் ஆண், ஆசைக்கு ஒரு பெண் என இரண்டு குழந்தைகள். பையன் 18 வயதை எட்ட இருந்தான். விடலைப் பருவத்திலிருந்து இளைஞன் என்ற பருவத்துக்கு மாறும் அவனது அந்தப் பிறந்த நாள் முக்கியமான நாள் என்பதால் அவனுக்கு நல்ல பிறந்தநாள் பரிசளிக்க விரும்பினார் அப்பா. அதனால் முன்கூட்டியே மகனிடம் அவனுக்குப் பிறந்தநாள் பரிசாக என்ன வேண்டுமென்று கேட்டார். மகனும் அப்பாவிடம், “உங்களது சிகரெட்டுகள் எனக்கு வேண்டும்” என்று கேட்டான். அப்பாவுக்கு மகனின் ஆசை அதிகமான அதிர்ச்சியைக் கொடுத்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அந்த நகரம் முழுவதும் அலைந்து கஷ்டப்பட்டு விலையுயர்ந்த சிகரெட்டு பாக்கெட்டுகளை வாங்கி வைத்திருந்தார். அந்தப் பிறந்தநாள் விழாவும் வந்தது. மகனிடம் அந்தப் பரிசுப்பொருளைக் கொடுத்தார் அப்பா. அப்போது மகன் அப்பாவிடம், “அப்பா எனக்கு இந்தச் சிகரெட் பாக்கெட்டுகள் வேண்டாம். உங்களது சிகரெட்டுகள்தான் எனக்கு வேண்டும். நீங்கள் புகைப்பிடிப்பதை நான் விரும்பவில்லை” என்று சொன்னான். ஏனெனில் அவனது அப்பா ஒரு நாளைக்கு 50 சிகரெட்டுகள் வீதம் புகைத்து வந்தார். மகனின் அந்த 18வது பிறந்த நாளிலிருந்து அப்பா சிகரெட் புகைப்பதை நிறுத்தி விட்டார். அன்புள்ளங்களே, இது ஒருவேளை நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் நடந்தது இதுதான். அவர் அன்றிலிருந்து சிகரெட் புகைப்பதை நிறுத்தி விட்டார் என்பதே உண்மை.
ஒருமுறை புனித தாமஸ் அக்குய்னாசின் சகோதரி அவரிடம், “தாமஸ், நான் புனிதராக மாற என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார். அதற்கு புனித தாமஸ், “விருப்பம்” என்று ஒர் வார்த்தையில் பதில் சொன்னார் என அவரது வரலாற்றில் வாசிக்கிறோம். ஒருவர் புனிதராக வேண்டுமென்றால், அவருக்கு அப்படியொரு “விருப்பம்” இருந்தாலே போதும் என்பதே புனித தாமசின் பதிலாக இருந்தது. ஆன்மீக வாழ்வில் முதிர்ந்த பல பெரியோர்களும், விருப்பப்படு... விருப்பப்படு... விருப்பப்படு... என்றுதான் சொல்லியுள்ளார்கள். எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் முதலில் மனது வைக்க வேண்டும். எந்த ஒரு செயலுமே முதலில் மனதில் உருவாக்க வேண்டும். மனதில் அதைச் செய்வதற்கு விருப்பப்பட வேண்டும். மனது ஒன்றித்துச் செய்யாத எந்த ஒரு செயலும் பயனற்றுப் போய்விடும். ஒருவர் செல்லும் பாதை தவறானது என்று அடுத்தவர்கள் எவ்வளவுதான் இடித்துரைத்தாலும், மாற வேண்டியவர் மனது வைக்காவிட்டால் எந்த மாற்றமும் ஏற்படாது.
குடும்பத்தில் பிரச்சனை, அடுத்தவரால் பிரச்சனை என்று வருபவர்களுக்கு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தீர்வுகளை வழங்கி வருகிறது. பிரச்சனையைக் கொண்டுவந்த மற்றவர்களெல்லாம் ஒவ்வொரு தீர்ப்பைச் சொன்னாலும்கூட, திருந்த வேண்டியவர்களிடம், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றுதான் அந்நிகழ்ச்சியை வழங்குபவர் திரும்பத் திரும்பக் கேட்கிறார். எடுத்துக்காட்டுக்கு, மதுபானத்துக்கு அடிமையானவர்கள், தங்களது மனைவிகளையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணிடம் வாழ்பவர்கள் போன்றவர்களிடம் பேசும்போது, சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்தைத்தான் கேட்கிறார்கள். இந்த உலகில் மாறாதது மாற்றம் ஒன்றுதான் என்று அடிக்கடி விளம்பரங்களில் காட்டுகிறார்கள். இன்று தமிழகத்தை எடுத்துக் கொண்டால் குடிபோதையால் சீரழியும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒரு குடிநோயாளியால் இம்மாதம் முதல்தேதி நடந்த ஒரு சீர்கேடு பற்றிக் கேளுங்களேன். அன்பர்களே, நீங்களும்கூட இச்செய்தியை ஊடகங்களில் வாசித்திருப்பீர்கள். விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பது 100 விழுக்காடு உண்மை என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் சத்தியமங்கலம் என்ற கிராமத்திலுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், மேல்பாப்பாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களும், ராஜாதேசிங் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை எழுதினார்கள். இம்மாதம் முதல் நாளன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் முதல்தாள் தேர்வு நடந்தது. 221 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிந்தவுடன், விடைத்தாள்களைப் பையில் அடுக்கி சீல்வைத்து, சத்தியமங்கலம் தபால் நிலையத்தில் ஒப்படைத்தார் பள்ளித் தலைமை ஆசிரியர். அவர் ஒப்படைத்த விடைத்தாள்கள் கல்வித் துறை அலுவலகத்துக்குச் செல்லாமல் பாதியிலே மாயமடைந்துவிட்டன. அதற்கு, தபால் நிலைய ஊழியர் ஒருவரின் குடிபோதையே காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுபானத்துக்கு அடிமையாக இருக்கும் அந்த ஊழியர், தபால் நிலையத்தில் இருந்து விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு செஞ்சி பேருந்து நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு, மீண்டும் பேருந்தைப் பிடித்து திண்டிவனம் சென்றுள்ளார். போதையில் விடைத்தாள்களை எங்கு வைத்தார், என்ன செய்தார் என்ற நினைவே அவருக்கு இல்லை. திண்டிவனம் இரயில் நிலையத்துக்கு வந்த பிறகுதான் விடைத்தாள்களின் நினைவு வந்திருக்கிறது. மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது என கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
இவ்வாறு தமிழ் ஊடகம் ஒன்றில் வாசித்தோம். இதேபோல் இன்னுமொரு தேர்வு மையத்திலும் விடைத்தாள்கள் காணாமற்போயிருக்கின்றன. இப்படிப் பொறுப்பற்ற மனிதர்களின் செயல்களால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. தமிழகத்தில் 2011-12ம் நிதியாண்டில் மதுபான விற்பனையால் 18,000 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது. இந்த வருமானம், அதற்கு முந்தைய நிதியாண்டைவிட 20 விழுக்காடு அதிகம் என்று The Times of India செய்தி வெளியிட்டிருந்தது. அதிலும் மதுபானம் அருந்தும் இளையோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அத்தினத்தாள் குறிப்பிட்டிருந்தது.
ஒரு குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். அதில் இரண்டாவது சகோதரர் குடிக்கு அடிமையாகி இருப்பதால் அவரது மனைவி, அவரது தம்பி, தம்பி மனைவி ஆகிய மூவரும் தற்கொலை செய்துள்ளனர். அந்தச் சகோதரர்களின் தந்தையும் ஒரு குடிகாரர். 13 வயதில் திருமணமான அவர்களின் தாய் கடந்த 45 ஆண்டுகளாக அனுபவித்த கஷ்டங்களைக் கண்ணீரோடு கூறக் கேட்டபோது எந்தக் கல்நெஞ்சையும் அத்தாயின் கதறல் கரைத்துவிடும் என்றே நினைத்தேன். இப்படிக் குடிபோதைக்கு அடிமையாகி இருப்பவர்கள் தாங்களாகத் திருந்த வேண்டும். தங்களால் தங்களது குடும்பம் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பார்த்துத் திருந்த வேண்டும். இதற்கு அவர்கள்தான் மனது வைக்க வேண்டும். சாராய மற்றும் கள்ளுக்கடைகளும், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டால்தான் நாங்களும் குடியை நிறுத்துவோம் என்று முரண்டுபிடித்துக் கொண்டிருந்தால் அரசும் அக்கடைகளுக்கான அங்கீகாரத்தை இரத்து செய்யப் போவதில்லை. இக்கடைகளினால் பெரும் பணம் திரட்டும் முதலாளிகளும் அரசியல்வாதிகளும் தங்களது தொழில்களை நிறுத்தப்போவதுமில்லை.
கடந்தவார உலகின், குறிப்பாக வடகொரியா உட்பட்ட சில நாடுகளின் நிலைமைகள் கலக்கத்தையே அதிகம் ஏற்படுத்தியுள்ளன. வடகொரியா அறிவித்துள்ள அணுஆயுதப் போருக்கான அச்சுறுத்தல் உலகின் அமைதி குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் அமைதிக்காகத் தொடர்ந்து உழைக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ், அத்தலைவர்களை வலியுறுத்துமாறு தென் கொரிய ஆயர்கள் கேட்டுள்ளனர். இதற்கிடையே, வட கொரியத் தலைநகர் Pyongyangகிலுள்ள இரஷ்ய, பிரித்தானியத் தூதரகங்கள் உட்பட பல வெளிநாட்டு தூதரகங்கள் அங்கிருந்து தங்களது பணியாளர்களை வெளியேற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று வடகொரியா கேட்டிருக்கிறது. வடகொரியாவின் அணுஆயுதங்கள் குறித்த புதிய பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், வடகொரியா தனது இரு நடுத்தர தூரஏவுகணைகளை அவற்றை ஏவக்கூடிய வாகனங்களில் பொருத்தியிருப்பதாக தென்கொரியா கூறியுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா அன்று வழங்கிய ஊர்பி எத் ஓர்பி செய்தியில் கொரிய நாடுகளுக்கு இடையே ஒப்புரவு ஏற்பட அழைப்பு விடுத்தார்.
RealAudioMP3 இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையைக் கேட்பதற்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நின்றுகொண்டிருந்த ஏறத்தாழ ஒரு இலட்சம் மக்களிடம், உயிர்த்த இயேசு வழங்கும் அமைதி குறித்து முதலில் பேசினார். இந்த அமைதி, தீமையின்மீது கடவுள் அடைந்த வெற்றியின் கனியாகும், மன்னிப்பின் கனியாகும் என்று கூறினார். இந்த உண்மையான, ஆழமான அமைதி கடவுளின் கருணையின் அனுபவத்திலிருந்து வருவது என்றும் அவர் கூறினார். RealAudioMP3
இந்த அமைதிக்காவே உலகினர் ஏங்குகின்றனர். ஆனால் சிரியாவில் இன்னும் அமைதி திரும்பவில்லை. புரட்சியாளர்கள் ஆயுதங்களைக் கைவிடுமாறு சிரியா அரசு வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் தமிழர் பிரச்சனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தக் குற்றச்சாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கும் குறைவான காலப்பகுதியில் ஏறக்குறைய 100 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு மேலும் 30 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அன்பர்களே, மாற வேண்டிவர்கள் மாற வேண்டும். எத்தனை போராட்டங்கள், எத்தனைத் தீக்குளிப்புகள், எத்தனை உண்ணாவிரதங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் மாற வேண்டியவர்கள் மாறுவதற்கு மனது வைக்க வேண்டும். இதற்கிடையே, பங்களாதேஷ் குறித்து இத்திங்களன்று பிபிசியில் வெளியான செய்தி ஒன்று மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது. பங்களாதேஷில் புதிய தெய்வநிந்தனைச் சட்டம் கொண்டுவரப்படவேண்டுமென்ற கோரிக்கையை அந்நாட்டு அரசுத்தலைவர் Sheikh Hasina, நிராகரித்துள்ளார். இசுலாமையும் இறைவாக்கினர் முகமதுவையும் மரியாதைக் குறைவாகப் பேசுகிறவர்களைத் தண்டிப்பதற்குப் புதிய தெய்வநிந்தனைச் சட்டம் அவசியம் என்று அந்நாட்டின் இசுலாம் அடிப்படைவாதிகள் கேட்டுள்ளனர்.
பிறவியிலேயே மாற்றுத்திறனாளியான ANDREA VENUTO என்பவர் ஒரு பத்திரிகையாளர். இவர் ஒரு கருவியின் உதவியுடனே சுவாசிக்கிறார். சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறார். பெரிய பெரிய புள்ளிகளைப் பேட்டி காண்கிறார். இவர் தனது தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நிறைவுசெய்யும் போதெல்லாம், "வாழ்வை வாழ்வதுதான் முக்கியம், மற்றவையெல்லாம் கடந்துபோகும்" என்று சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
ஆம். அன்பர்களே, வாழ்வை வாழ்வதுதான் முக்கியம், மற்றவையெல்லாம் கடந்துபோகும். இவ்வுலகில் மாறாதது மாற்றம் ஒன்றே. மாறாமல் இருப்பவர் இறைவன் ஒருவர் மட்டுமே. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு டுவிட்டர் செய்தியில் சொல்லியிருப்பதுபோல, இறைவன் கருணையால் முழுவதும் நிரம்பியிருப்பவர். அவர் கருணையே வடிவானவர். எனவே நம் வாழ்வில் நல்மாற்றத்தை ஏற்படுத்த நல்ல மனது வைப்போம். அதற்கு இறைவனின் அருளையும் கேட்போம். மனதே அனைத்துக்கும் அடிப்படை







All the contents on this site are copyrighted ©.