2013-04-08 16:44:05

எகிப்தில் கிறிஸ்தவ- இஸ்லாம் மோதல்கள் அதிகரித்துள்ளன


ஏப்.08,2013. எகிப்தின் Khosous மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே எழுந்துள்ள பதட்ட நிலைகளால் மூன்றே நாட்களில் ஆறுபேர் கொல்லப்பட்டுள்ளனர். மோதல்களில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர் ஒருவரின் சவ ஊர்வலத்தின்போது அடையாளம் தெரியாத ஒரு குழு புகுந்து தாக்கியதில் ஒரு கிறிஸ்தவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
கோவில் உடமைகளையும் பாலர் பள்ளி ஒன்றையும் தாக்கிய இஸ்லாமியக் குழு ஒன்று கிறிஸ்தவர்களை நோக்கிச் சுட்டதில் முகத்திலும் நெஞ்சிலும் குண்டுகாயங்களுடன் நான்கு கிறிஸ்தவர்கள் மரணமடைந்தனர். இந்த மோதல்களின்போது இதனைப் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை, இதனைத் தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என கிறிஸ்தவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்த அடக்கச் சடங்குகளின்போது எழுந்த வன்முறையிலும் காவல்துறை போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இவ்வன்முறை நிகழ்வுகள் குறித்து எகிப்து அரசுத்தலைவர் முகமது மோர்சி, காப்டிக் கிறிஸ்தவ சபை முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros, மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அமைப்பினரும் தங்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் - AsiaNews








All the contents on this site are copyrighted ©.