2013-04-06 16:03:20

தென் கொரிய ஆயர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் : உலகத் தலைவர்கள் அமைதிக்காக உழைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்த கோரிக்கை


ஏப்.06,2013. வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கானத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபத்துக்கு நன்றிகூறியுள்ளவேளை, திருத்தந்தை அவர்கள், கொரியத் தீபகற்பத்தின்மீது தொடர்ந்து கவனம் செலுத்துவார் என்ற தங்களது நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் தென் கொரிய ஆயர்கள்.
வட கொரியா, இன்று கையிருப்பிலுள்ள அணுஆயுதங்களுடன் போருக்கான அச்சுறுத்தலை முன்வைத்துள்ளது ஒவ்வொருவருக்கும் கடும் விளைவைக் கொண்டுவரும் என்று பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ள தென் கொரிய ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Peter Kang, போரின் பின்விளைவுகள் குறித்து தாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளதாகக் கூறினார்.
கொரியத் தீபகற்பத்தில் அமைதி ஏற்படுவதற்காக, கொரியா, இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கடுமையாய் உழைக்குமாறு திருத்தந்தை வலியுறுத்த வேண்டுமென்ற தங்களது ஆவலையும் தெரிவித்தார் ஆயர் Peter Kang.
வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதன் 60ம் ஆண்டு, இந்த 2013ம் ஆண்டில் நினைவுகூரப்படுவதைக் குறிப்பிட்டுள்ள ஆயர் Kang, அமைதியின் உண்மையான உடன்பாட்டை நோக்கிச் செல்வதற்கு இது நல்ல வாய்ப்பு என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, தென் கொரியாமீது போரைத் தொடங்குவதாக அறிவித்துள்ள வட கொரியா, இரு நாடுகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டுவரும் கூட்டுத்தொழில் மண்டலத்தை மூடப்போவதாக அறிவித்துள்ளது.
போர்ப் பிரகடனம் செய்யப்பட்டுவிட்டதால், இனி அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால விதிகளின்படியே மேற்கொள்ளப்படும் என்றும் வட கொரியா அறிவித்துள்ளது.
வட கொரியாவின் எல்லைக்குள் செயல்பட்டுவரும் இந்தத் தொழில்மண்டத்துக்கு தென் கொரியாவில் இருந்து நேரடிப் போக்குவரத்து வசதி உள்ளது.

ஆதாரம்: Fides







All the contents on this site are copyrighted ©.