2013-04-06 15:44:03

திருத்தந்தை பிரான்சிஸ் : விசுவாசத்துக்குத் துணிச்சலுடன் சாட்சி பகருங்கள்


ஏப்.06,2013. விசுவாசத்தின் கூறுபடாத்தன்மைக்குத் துணிச்சல் நிறைந்த சாட்சிகளாக வாழுங்கள் என்று, இச்சனிக்கிழமை காலை புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கலந்து கொண்ட விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நாளின் திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து சிறிய மறையுரையாற்றிய திருத்தந்தை, விசுவாசம், எதனோடும் பேரம் பேச முடியாதது என்று தெரிவித்தார்.
புனிதர்கள் பேதுருவும் யோவானும் விசுவாசத்துக்குத் துணிச்சலுடன் சான்று பகர்ந்தது குறித்து விளக்கி, நமது விசுவாசம் எத்தகையது என்ற கேள்வியையும் முன்வைத்தார் திருத்தந்தை.
இந்த 21ம் நூற்றாண்டில் நமது திருஅவை மறைசாட்சிகளின் ஒரு திருஅவையாக இருந்து வருகின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இன்று பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் விசுவாசத்துக்காக நசுக்கப்படுகின்றனர் என்றும் கூறினார்.
சில நாடுகளில் சிலுவைகளை வைத்திருக்க முடியாது, அப்படி வைத்திருந்தால் தண்டிக்கப்படுகிறார்கள் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், கடவுள் வழங்கும் விசுவாசம் எனும் அருளைத் துணிச்சலுடன் வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் நாம் செபிக்க வேண்டும் என்று கூறினார்.
இத்திருப்பலியில் ஓர் அர்ஜென்டினா குடும்பம், புனித கமில்லஸ் மற்றும் பிறரன்பு அன்னை சபைகளைச் சேர்ந்த அருள்சகோதரிகள் சிலர் கலந்து கொண்டனர்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.