2013-04-06 15:47:53

திருத்தந்தை பிரான்சிஸ் : அர்ஜென்டினாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவி


ஏப்.06,2013. அர்ஜென்டினாவில் இவ்வாரத்தில் பெய்த கனமழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில், 50 ஆயிரம் டாலரை அனுப்பியுள்ளது திருப்பீடத்தின் Cor Unum பிறரன்பு நிறுவனம்.
அர்ஜென்டினாவின் திருப்பீடத் தூதரகம் வழியாக, La Plata உயர்மறைமாவட்டத்துக்கு இவ்வுதவியை அனுப்பியுள்ளது Cor Unum பிறரன்பு நிறுவனம்.
தலத்திருஅவைகளின் மேலும்பல பிறரன்பு நிறுவனங்களும் இம்மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் அதில் இறந்தவர்களுக்குத் தனது செபங்கள் மற்றும் அனுதாபங்கள் நிறைந்த தந்திச்செய்தியை ஏற்கனவே அனுப்பியிருந்த திருத்தந்தை, இம்மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுமாறு அரசு அதிகாரிகளையும் திருஅவை நிறுவனங்களையும் ஊக்கப்படுத்தியிருந்தார்.
இவ்வெள்ளத்தில் குறைந்தது 50 பேர் இறந்துள்ளனர் என்றும், இவ்வெண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த அனுதாபத் தந்திச் செய்தியை, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, Buenos Aires பேராயர் Mario Aurelio Poli அவர்களுக்கு அனுப்பியிருந்தார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.