2013-04-06 16:05:24

தானே கட்டட விபத்து குறித்த இந்திய ஆயர்களின் இரங்கல் செய்தி


ஏப்.06,2013. இந்தியாவின் மகாராஷ்ட்ர மாநிலத்தின் தானேவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களுக்குத் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர் இந்திய ஆயர்கள்.
இந்திய ஆயர்களின் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள, இந்திய ஆயர் பேரவையின் பேச்சாளர் அருள்திரு Dominic D’Abreo, இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடனான ஆயர்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார்.
கட்டடங்களைக் கட்டுவதில் கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்படுமாறு அரசு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ள அருள்திரு Dominic, கட்டுமானத் தொழில்புரிவோர் மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
தானே மாவட்டத்தின் ஷில் பட்டா பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், இதுவரை 72 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 17 பேர் குழந்தைகள் மற்றும் 22 பேர் பெண்கள் எனத் தெரியவந்துள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 60க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர்ப்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
கட்டட இடிபாடுகளில் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.







All the contents on this site are copyrighted ©.