2013-04-06 16:06:39

ஐ.நா.வின் ஆயிரம் நாள்கள் செயல்திட்டம்


ஏப்.06,2013. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மில்லென்யம் வளர்ச்சித் திட்ட இலக்குகள்(MDGs) எனப்படும் ஏழ்மைக்கு எதிரான எட்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கெடுநாள் 2015ம் ஆண்டோடு நிறைவடைவதால், இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இன்னும் இருக்கின்ற ஆயிரம் நாள்களில், அரசுகள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சமூகக் குழுக்கள் தங்களது முயற்சிகளை முடுக்கிவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது ஐ.நா. நிறுவனம்.
MDG என்ற இந்த வளர்ச்சித் திட்ட இலக்குகள், வரலாற்றில் ஏழ்மையை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள மிகுந்த வெற்றிகரமான நடவடிக்கை என்று இஸ்பெயின் தலைநகர் மத்ரித்தில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், “MDG நேரம் ஆயிரம் நாள்கள் செயல்திட்டம்” என்ற ஒரு புதிய செயல்திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
ஏழ்மை மற்றும் பசி ஒழிப்பு, பாலினச் சமத்துவம், குழந்தை இறப்பைத் தடுத்தல், தாய்சேய் நலவாழ்வு, எய்ட்ஸ், மலேரியா மற்றும் பிற நோய்கள் ஒழிப்பு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், வளர்ச்சிக்கு உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை ஐ.நா.வின் மில்லென்யம் வளர்ச்சித் திட்ட இலக்குகள் ஆகும்.
இரண்டாயிரமாம் ஆண்டில், ஐ.நா. உறுப்பு நாடுகள் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் தெரிவித்த பின்னர் உலகில் கடும் ஏழ்மையில் வாழ்வோரின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது மற்றும் 200 கோடிப் பேருக்குச் சுத்தமான குடிநீர் வசதி கிடைத்துள்ளது என ஐ.நா. கூறுகிறது.
ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.