2013-04-05 16:01:45

இந்தியாவில் வயிற்றுப்போக்கு நோயிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற புதிய திட்டம்


ஏப்.05,2013. வயிற்றுப்போக்கு நோயால் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் அதிக அளவில் குழந்தை இறப்பு நிகழ்வதைத் தடுப்பதற்கு ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யுனிசெப் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 2 இலட்சத்து 25 ஆயிரம் குழந்தைகள் ஆண்டுதோறும் வயிற்றுப்போக்கு நோயால் இறக்கும்வேளை, இந்நோயை ஒழிப்பதற்கு, துத்தநாகத் தாதுவின் உபபொருள்களைக் கொண்டும், தாது உப்புகளைக் கொண்டும் மேலும் அதிகக் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியாவின் யுனிசெப் நிறுவனப் பிரதிநிதி Louis-Georges Arsenault தெரிவித்தார்.
யுனிசெப் கானடா மற்றும் Teck என்ற, சுரங்கம் மற்றும் தாதுப்பொருள் மேம்பாட்டு தொழில் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தும் என்றும் தெரிவித்த Arsenault, இத்திட்டத்தினால் 5 ஆண்டுகளில் 15 இலட்சம் குழந்தைகளின் வாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்
இந்தியாவில் இடம்பெறும் குழந்தை இறப்புக்களில் 30 விழுக்காட்டுக்கு வயிற்றுப்போக்கு நோய் காரணமாக உள்ளது. எனினும் இந்நோய் தடுத்து நிறுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்நோயினால் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

ஆதாரம் : Hindustan Times







All the contents on this site are copyrighted ©.