2013-04-05 15:54:12

இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் குழு : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது அருளின் நேரம்


ஏப்.05,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது அருள் மற்றும் புனிதத்துவத்தின் நேரமாக இருந்தது என்று, இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று கூறியது.
வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய முதல் புதன் பொது மறைபோதகத்தில் கலந்து கொண்ட இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்றை வழிநடத்திச் சென்ற கெவின் டி சூசா இக்குழுவில் நால்வருக்குத் திருத்தந்தையின் கரங்களைத் தொடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது என்று தெரிவித்தார்.
இந்த மாணவர்கள் குழுவின் அனுபவங்களை ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்ட கெவின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தாங்கள் அன்புகூருவதாகவும் தெரிவித்தார்.
உரோமையில் நடைபெற்ற 46வது பல்கலைக்கழக மாணவர்கள் மாநாட்டில்(UNIV) கலந்து கொண்ட மும்பை, டெல்லி, ஒடிசா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 14 மாணவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய முதல் புதன் பொது மறைபோதகத்தில் கலந்து கொண்டனர்.
இந்த முதல் புதன் பொது மறைபோதகத்தில் பல நாடுகளைச் சேர்ந்த மூவாயிரத்துக்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்:AsiaNews








All the contents on this site are copyrighted ©.