2013-04-04 16:01:28

ஏப்ரல் 4, நிலத்தடி வெடிகுண்டுகளை முழுவதும் நீக்கும் உலக நாளுக்கு ஐ.நா. பொதுச்செயலர் செய்தி


ஏப்.04,2013. மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் வெடி குண்டுகள் மூலம் பல்லாயிரம் அப்பாவி உயிர்களைப் பறிக்கும் சிரியா, மாலி ஆகிய நாடுகளில் நிலவும் வன்முறைகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுக்கொண்டார்.
நிலத்தடி வெடிகுண்டுகளை உலகிலிருந்து முழுவதும் நீக்கும் உலக நாள் ஏப்ரல் 4ம் தேதி கடைபிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், போரினால் சிதறுண்டிருக்கும் பல்வேறு நாடுகளில் இன்னும் நிலத்தடி வெடிகுண்டுகள் அகற்றப்படும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிலத்தடி வெடிகுண்டுகளுக்கு எதிராக உலகின் 161 நாடுகள் கையெழுத்திட்டிருப்பது உற்சாகத்தைத் தருகிறது என்றாலும், இந்தப் பிரச்சனையில் இன்னும் அனைத்து நாடுகளும் இணைந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் பான் கி மூன்.
2013 முதல் 2018 முடிய உள்ள அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐ.நா. மேற்கொள்ளவிருக்கும் செயல்பாடுகளைக் குறித்தும் இச்செய்தியில் கூறியுள்ள பான் கி மூன், நிலத்தடி வெடிகுண்டுகளை உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கும் முயற்சிகளில் அனைத்து நாடுகளின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் – வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.