2013-04-04 15:55:53

உரோம் நகர் வந்திருந்த 10000க்கும் மேற்பட்ட மிலான் இளையோரின் பயணம் குறித்து கர்தினால் Scola


ஏப்.04,2013. நிகழும் நம்பிக்கை ஆண்டில் நமது விசுவாசத்தின் வேர்களைத் தேடி புனித பேதுரு, மற்றும் புனித பவுல் பசிலிக்காப் பேராலயங்களுக்குத் திருப்பயணம் செய்வதற்கு மிலான் உயர் மறைமாவட்டம் தீட்டியிருந்த திட்டங்கள் நன்முறையில் நிறைவேறியது குறித்து கர்தினால் Angelo Scola மகிழ்வைத் தெரிவித்தார்.
இச்செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்கள் மிலான் உயர் மறைமாவட்டத்திலிருந்து உரோம் நகர் வந்திருந்த 10000க்கும் மேற்பட்ட இளையோரின் பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கர்தினால் Scola இவ்வாறு கூறினார்.
இத்திருப்பயணத்தை மேற்கொண்ட இளையோரில் 6000க்கும் மேற்பட்டோர் 14 வயதுக்குட்பட்டவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Scola, இவ்விளையோர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது இத்திருப்பயணத்தின் உச்சக்கட்டமாக அமைந்தது என்று குறிப்பிட்டார்.
மக்களின் மனங்களுக்கு நேரடியாகப் பேசும் அருங்கொடையைக் கொண்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், இவ்விளையோரிடமும் நேரடியாகப் பேசியது அவர்களது விசுவாச வாழ்வுக்குப் பெரிதும் உந்துதலாக இருக்கும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார் கர்தினால் Scola.
தென் அமெரிக்காவில் ஏழைகள் மத்தியில் பணிபுரிந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அனுபவம் உலகத் திருஅவையை தகுந்த பாதையில் வழிநடத்த பெரும் உதவியாக இருக்கும் என்று கர்தினால் Scola தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் – வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.