2013-04-03 16:11:36

திருத்தந்தை பிரான்சிஸ் டோமினிக்கை அரவணைத்து முத்தமிட்டது, கடவுளிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஒரு முத்தம் - மாற்றுத் திறனாளியின் பெற்றோர்


ஏப்.03,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் மகன் டோமினிக்கை அரவணைத்து முத்தமிட்டது, கடவுளிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஒரு முத்தமாகக் கருதுகிறோம் என்று மாற்றுத் திறனாளி ஒருவரின் பெற்றோர் கூறியுள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 31ம் தேதி உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியை புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நிறைவேற்றியபின், மக்கள் மத்தியில் அவர் வாகனத்தில் சென்றபோது, மூளை தொடர்பான நோயினால் உடல் செயலற்று வாழும் Dominic Gondreau என்ற சிறுவனை அணைத்து முத்தமிட்டது உள்ளத்தைத் தொடும் ஒரு காட்சியாக உலகெங்கும் காணப்பட்டது.
சிறுவன் டோமினிக்கின் தந்தை Paul Gondreau அமெரிக்காவில் Rhode Island என்ற மாநிலத்தில் இறையியல் ஆசிரியராகப் பணியாற்றுபவர். தங்கள் மகன் படும் துயரங்கள் வழியாகவும், அவன் காட்டும் அன்பின் வழியாகவும் தாங்கள் அன்பையும் துன்பத்தையும் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டோம் என்று கூறும் பேராசிரியர் பால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் மகனை அணைத்ததன் வழியாக அவரது அன்பு உள்ளத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது என்று கூறினார்.
CNN என்ற ஊடகத்திற்கு சிறுவன் டோமினிக்கின் தாய் கிறிஸ்டினா அளித்த பேட்டியில், 'திருத்தந்தையிடமிருந்து எங்கள் மகன் பெற்ற அரவணைப்பு, கடவுளிடமிருந்து நாங்கள் அனைவருமே பெற்ற ஒரு முத்தம்' என்று குறிப்பிட்டார்.
ஆதாரம் - CNS








All the contents on this site are copyrighted ©.