2013-04-03 15:32:15

அன்னைமரியா திருத்தலங்கள் – குவாதலூப்பே அன்னைமரியா, மெக்சிகோ


ஏப்.03,2013 நாடுகாண் பயணி கிறிஸ்டோபர் கொலம்பஸ், 1492க்கும் 1503க்கும் இடைப்பட்ட காலத்தில் இஸ்பெயினிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக நான்கு முறைகள் பயணம்செய்து புதிய கண்டத்தைக் கண்டுபிடித்தார். ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளை உள்ளடக்கியதுதான் இவ்வுலகம் என்று அதுவரை எண்ணிவந்த ஐரோப்பியர்கள், தாங்கள் கண்டுபிடித்த வட மற்றும் தென் அமெரிக்காவை புதிய உலகம் என்று அழைக்கத் தொடங்கினர். இப்புதிய உலகம் கண்டுபிடிக்கப்பட்டதோடு, வருங்காலத்தை வளமாக்க நினைத்தவர்களும், சமயப் போதகர்களும் அங்குச் சென்று குடியேறினர். சமயப் போதகர்கள், புதிய கண்டத்தின் பூர்வீக இனங்களின் மக்களிடம் கிறிஸ்தவ விசுவாசத்தைப் போதித்தனர். அவர்களில் பலர் மனமாறி கிறிஸ்தவ விசுவாசத்தைத் தழுவினர். இவ்வாறு கிறிஸ்தவத்தைத் தழுவிய Aztec பூர்வீக இனத்தவரில் ஒருவர்தான் ஏழை விவசாயியான ஹூவான் தியெகோ (Juan Diego). இவரை முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் 2002ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி புனிதர் என அறிவித்தார்.
1531ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி, அமலஉற்பவி விழாவன்று ஹூவான் தியெகோ அதிகாலையில் தனது கிராமத்திலிருந்து மெக்சிகோ நகரத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அக்காலத்தில் இஸ்பானியப் பேரரசில் அமலஉற்பவி விழா டிசம்பர் 9ம் தேதியன்று சிறப்பிக்கப்பட்டது. 57 வயதான தியெகோ, மெக்சிகோ நகரிலுள்ள Tlatelolco ஆலயத்தில் மறைக்கல்வி வகுப்பிலும், திருவிழா திருப்பலியிலும் பங்கு கொள்வதற்காக Tepayac குன்று வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அக்குன்றின் உச்சியில், சூரியனைப் போன்ற பிரகாசமான ஒளியைப் பார்த்தார். அதிலிருந்து வந்த விண்ணக இசை போன்ற இனிமையான இசையையும் கேட்டார். பின்னர் அங்கிருந்து ஒரு பெண்ணின் குரல், தியெகோவை அக்குன்றில் ஏறி வருமாறு அழைத்தது. தியெகோ அங்கு ஏறிச் சென்றபோது, விண்ணக மகிமையில், பிரகாசமான ஒளிக்கு மத்தியில் புனித கன்னி மரியா நிற்பதைக் கண்டார். புனித கன்னி மரியின் இளமை அழகையும், அவர் தியெகோவைக் கனிவுடன் நோக்கியதையும் பார்த்து பரவசமானார். பின்னர் தியெகோவின் மொழியான Nahuatlலில் புனித கன்னி மரியா பேசினார்.
"நானே விண்ணகப் புனித கன்னி மரியா, உண்மையான இறைவனின் தாய். இந்த இடத்தில் தனக்காக ஒரு திருத்தலம் கட்ட வேண்டும். மக்கள்மீது தான் வைத்திருக்கும் அன்பையும், பரிவையும், பாதுகாப்பையும் அங்கு வெளிப்படுத்துவேன். நானே உனது கருணைநிறைந்த தாய். என்னை அன்பு செய்து, என்மீது நம்பிக்கை வைத்து, எனது உதவியைக் கேட்கும் உனக்கும், அனைத்து மனித சமுதாயத்துக்கும் இரக்கம்நிறைந்த அன்னையாக இருப்பேன். எனவே மெக்சிகோ நகரிலுள்ள ஆயரிடம் சென்று நான் உன்னை அனுப்பியதாகவும், எனது ஆசையையும் அறிவி" என்று சொன்னார் அன்னை மரியா. தியெகோவும் ஆயரிடம் சென்று அனைத்தையும் விளக்கினார். ஆனால் ஆயர் தியெகோவை நம்பவில்லை. தியெகோ மீண்டும் அந்த Tepayac குன்றுக்கு வந்தார். அங்கு அன்னை மரியா அவருக்காகக் காத்திருந்தார். ஆயர் தன்னை நம்பவில்லை என்று தியெகோ சொன்னதும், அடுத்த நாளும் ஆயரிடம் சென்று தனது ஆவலைத் தெரிவிக்குமாறு பணித்தார் அன்னை மரியா. அதேபோல் தியெகோ ஆயரிடம் சென்று சொன்னதும், அக்காட்சிக்கு ஓர் அடையாளம் தருமாறு அப்பெண்ணிடம் கேட்குமாறு ஆயர் தியெகோவிடம் கேட்டுக்கொண்டார். அன்று மாலையே தியெகோ அன்னைமரியாவிடம் நடந்தததைச் சொன்னார். அன்னைமரியாவும் அடுத்த நாள் காலையில் அவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக உறுதி கூறினார். ஆனால் தியெகோவால் அடுத்த நாள் அங்குச் செல்ல முடியவில்லை. ஏனெனில் அவரது மாமா ஹூவான் பெர்னார்தினோ, திடீரென கடும் நோயால் தாக்கப்பட்டிருந்தார்.
இறந்து கொண்டிருந்த தனது மாமாவுக்கு இறுதி திருவருள்சாதனம் கொடுப்பதற்காக, டிசம்பர் 12ம் தேதி, Tlatelolcoவிலுள்ள ஆலயம் சென்று அருள்பணியாளரை அழைக்கச் சென்றார் தியெகோ. அப்போது அன்னைமரியா, தியெகோவைச் சந்திப்பதற்காக Tepeyac குன்றிலிருந்து இறங்கி தெருவுக்கு வந்து தியெகோவை வழிமறித்தார். அன்னைமரியாவிடம் உறுதி கூறியதுபோல் தான் வரமுடியாததற்கு மன்னிப்புக் கேட்டார் தியெகோ. தியெகோ சொன்னதைப் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த அன்னை மரியா, அவரிடம்...
“எனது மகன்களில் மிகச்சிறிய மற்றும் மிகவும் அன்புக்குரிய மகனே, இப்போது நான் சொல்வதைக் கேள். எந்தத் துயரமும் உன்னைப் பாதிக்காமல் இருக்கட்டும். நோய் அல்லது வேதனை குறித்துப் பயப்படாதே. உனது தாயாகிய நான் இங்கு இல்லையா? எனது பாதுகாவலிலும் எனது நிழலிலும் நீ இல்லையா? எனது கரங்களுக்கிடையில் நீ இல்லையா? வேறு என்ன உனக்குத் தேவை? உனது மாமா குறித்துப் பயப்படாதே. அவர் இறக்கமாட்டார். அவர் ஏற்கனவே குணமாகிவிட்டார். இது உறுதி”
என்று அன்னைமரியா சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த தியெகோ, ஆயரிடம் எடுத்துச் செல்ல ஓர் அடையாளம் கேட்டார். இதற்கு முன்னர் மூன்று தடவைகள் அவரோடு பேசிய Tepeyac குன்றின் உச்சிக்குச் செல். அங்கு மலர்கள் பூத்துக்குலுங்கி இருக்கும். அவற்றைப் பறித்துக்கொண்டு தன்னிடம் வருமாறு கூறினார் அன்னை மரியா. இந்தப் பாறைக் குன்றின் உச்சியில் இதற்கு முன்னர் எந்தப் பூக்களும் பூத்ததில்லை என்பது தியெகோவுக்குத் தெரியும். எனினும் அங்குச் சென்றார். அங்கு அழகிய பூந்தோட்டமே இருப்பதைக் கண்டார். அவைகளைப் பறித்து தனது மேற்போர்வையில் பொதிந்து வந்து அன்னை மரியாவிடம் கொடுத்தார். அந்தப் பூக்களை அவரது மேற்போர்வையில் அழகுபடுத்திக்கொடுத்து அதை ஆயரிடம் கொண்டுபோகச் சொன்னார் அன்னை மரியா. ஆயரை நம்ப வைக்க, தான் தரும் அடையாளம் இதுவே என்று சொல்லி அனுப்பினார்.
தியெகோ மிகுந்த மகிழ்ச்சியோடு, அப்போது ஆயராக நியமனம் செய்யப்பட்டிருந்த Fray Juan de Zumarragaவின் முன்னால் போய் நின்று, தனது மேற்போர்வையைத் திறந்து காண்பித்தார். அதிலிருந்து மலர்கள் கொட்டின. ஆனால் ஆயர் மற்றும் தியெகோவின் கண்களையே நம்ப முடியாத வகையில் தியெகோவின் மேற்போர்வையில் அழகிய அன்னைமரியாவின் உருவம் பதிந்திருந்தது. தியெகோ எப்படி வருணித்திருந்தாரோ அதேமாதிரியான உருவம் அதில் இருந்தது. அதேநாளில் அன்னை மரியா, தியெகோவின் மாமா ஹூவான் பெர்னார்தினோவுக்கும் தோன்றி நல்ல சுகம் அளித்தார். அப்போது பெர்னார்தினோவுக்கு வயது 68. ஹூவான் தியெகோவுக்கு வயது 57. பெர்னார்தினோ, தனக்கு நடந்த புதுமையையும் ஆயரிடம் கூறுமாறு அன்னைமரியா சொல்லியிருந்ததை தியெகோவிடம் சொன்னார். அத்துடன் தனது இந்த உருவத்தை “Santa Maria de Guadalupe” என்ற பெயரில் அழைத்து தனக்கு வணக்கம் செலுத்துமாறும் பெர்னார்தினோவிடம் அன்னைமரியா சொல்லியிருந்தார். இன்றும் ஏறக்குறைய 500 ஆண்டுகளாக அன்னைமரியா, Guadalupe அன்னை மரியா என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
அன்னைமரியாவின் திருவுருவம் பதிந்த தியெகோவின் மேற்போர்வை 1531ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று, ஆயரின் இல்லத்திலிருந்து Tepeyac குன்றின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த புதிய சிற்றாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 1622ம் ஆண்டுக்கு முன்னர் இவ்வாலயம் பலமுறை புதுப்பிக்கப்பட்டது. முதல் மூன்று காட்சிகளின் நினைவாக, 1667ம் ஆண்டில் அக்குன்றில் ஒரு சிற்றாலயம கட்டப்பட்டது. 1957ம் ஆண்டில் குன்றின் உச்சியில் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது. திருத்தந்தை 13ம் சிங்கராயரின் ஆணையின்பேரில், 1895ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி குவாதலூப்பே அன்னைமரியாவின் திருவுருவம் வெகு ஆடம்பரமாக முடிசூட்டப்பட்டது. இந்த அன்னைமரியா கிரீடத்தில் விலையுயர்ந்த கற்களும் ஆபரணங்களும் உள்ளன. இவை மெக்சிகோ நகர்ப் பெண்களால் நன்கொடையாக வழங்கப்பட்டவையாகும். குவாதலூப்பே அன்னைமரியாவின் திருவுருவம் வெகு ஆடம்பரமாக முடிசூட்டப்பட்டதன் 50ம் ஆண்டின் நிறைவு விழாவையொட்டி 1945ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி திருத்தந்தை 12ம் பத்திநாதர், குவாதலூப்பே அன்னைமரியாவை அமெரிக்காவின் பாதுகாவலியாக அறிவித்தார். அதே ஆண்டில் இரண்டாவது கிரீடம் மெக்சிகோ மக்களால் நன்கொடையாக அளிக்கப்பட்டது. இது 32 பவுண்டு எடையுடையது. மேலும்பல விலைமதிப்பில்லா கிரீடங்களும் உள்ளன. இவை மெக்சிகோவின் பொற்கொல்லர்கள், வெள்ளிக்கொல்லர்கள் உட்பட பல்வேறு குழுக்களால் வழங்கப்பட்டவை. தற்போதைய புதிய பசிலிக்கா 1976ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி கட்டப்பட்டது.
உலகில் மக்கள் அதிகமாகச் செல்லும் முதல் திருத்தலம் மெக்சிகோவிலுள்ள குவாதலூப்பே அன்னைமரியா திருத்தலமாகும். அடுத்ததாக தமிழகத்தின் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலம் என்று கடந்த மாதத்தில் ராஞ்சிப் பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ கூறினார். அன்னைமரியிடம் செல்வோம். அவர் நம்மைத் தன் அன்பால் நிறைத்து அரவணைத்துக் காப்பார்.







All the contents on this site are copyrighted ©.