2013-04-02 15:57:23

விவிலியத் தேடல் – 'நல்ல சமாரியர்' உவமை: பகுதி 7


RealAudioMP3 அருள் பணியாளர்களுக்குப் பயிற்சிகள் தரப்படும் Princeton இறையியல் கல்லூரியில், 67 குரு மாணவர்களிடையே ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. ஒருவரது குணநலன்கள் சூழலுக்கு ஏற்ப மாறும் என்பதை நிரூபிக்க நடத்தப்பட்ட பரிசோதனை இது. இம்மாணவர்கள் ஓர் அரங்கத்தில் ஒன்று சேர்ந்தனர். அருகிலிருந்த ஓர் அறைக்குச் சென்று அவர்கள் ஒரு சிறு உரை வழங்க வேண்டுமெனச் சொல்லப்பட்டது. குரு மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவுக்கு வழங்கப்பட்ட தலைப்பு: "அருள் பணியாளர்களுக்கு ஏற்ற பணிகள்"; மற்றொரு குழுவுக்கு வழங்கப்பட்ட தலைப்பு: "நல்ல சமாரியர் உவமை".
குரு மாணவர்கள் ஒவ்வொருவராக உரை வழங்க அனுப்பப்பட்டனர். அவர்கள் போகும் வழியில் அமர்ந்திருந்த ஒருவர், சிலரிடம், "விரைவாகச் செல்லுங்கள், தாமதித்து விட்டீர்கள், அவர்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்" என்று சொன்னார். மற்றவர்களிடம், "உங்கள் உரை துவங்க இன்னும் நேரம் உள்ளது, எனவே அவசரம் தேவையில்லை" என்று சொன்னார். அவர் சொன்னதற்கேற்ப அக்குரு மாணவர்கள் விரைவாகவும், நிதானமாகவும் உரை வழங்கும் இடம் நோக்கிச் சென்றனர்.
அவர்கள் சென்ற வழியில் ஒரு மனிதர் தரையில் படுத்துக் கிடந்தார். வலியால் உடல் குறுகி, இருமிக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற அனைவருமே குரு மாணவர்கள். எதிர்காலத்தில் மக்களுக்கு அருள்பணி செய்யவிருப்பவர்கள். அத்தகையோர் இம்மனிதரைக் கண்டதும், ஓடோடிச் சென்று உதவியிருப்பர் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இல்லையா? ஆனால், அங்கு நடந்தது என்ன?

அவர்களுக்குத் தரப்பட்டச் செய்திகளுக்கேற்ப அவர்கள் நடந்துகொண்டனர். 'சீக்கிரம் செல்லுங்கள்' என்ற செய்திகேட்டு அவசரமாய்ச் சென்றவர்கள் அம்மனிதரைக் கண்டும் காணாததுபோல் விலகிச் சென்றனர். அவர்களில் ஒருவர், தான் சென்ற அவசரத்தில், அம்மனிதர் அங்கு படுத்திருந்ததைக் கூடப் பார்க்காமல், அவர் மீது கால்பதித்துச் சென்றார். இதற்கு மாறாக, நிதானமாகச் செயல்பட்டவர்களில் ஒரு சிலர் அம்மனிதருடன் பேச முயன்றனர்; இன்னும் சிலர் அவருக்கு உதவிகள் செய்தனர்.
இதில் மற்றொரு அம்சமும் உள்ளது. "அருள் பணியாளர்களுக்கு ஏற்ற பணிகள்" என்ற தலைப்பில் தங்கள் உரையைத் தாயார் செய்தவர்களில் பலர் அம்மனிதருக்கு உதவுவதில் அதிகம் அக்கறை காட்டவில்லை. "நல்ல சமாரியர் உவமை" என்ற தலைப்பில் உரையைத் தயார் செய்தவர்களில் பலர் அவர் மீது அக்கறை காட்டவும், உதவவும் முன்வந்தனர்.

இவர்கள் அனைவருமே குரு மாணவர்கள்தாம். ஆனால், தேவையில் இருந்த ஒரு மனிதருக்கு உதவுவதில் ஏன் இத்தனை வேறுபாடுகள்? சூழல்கள் அவர்களது செயல்களை மாற்றின என்பதே காரணம். தங்களுக்குக் குறிக்கப்பட்ட பணிக்குத் தாமதமாகச் செல்கிறோம் என்ற பதட்டத்தில் சென்றவர்களுக்கு, அடுத்திருப்பவரின் தேவையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் குறைந்திருந்தது.
அவர்களது சூழலைப் புரிந்துகொள்ளாமல், அவர்கள் செயல்களை மட்டும் வைத்து நாம் கணித்தால், அம்மனிதருக்கு உதவிகள் செய்யாமல் போன குரு மாணவர்கள் அருள் பணியாளர்களாக மாறும் தகுதி அற்றவர்கள் என்று அவசர முடிவெடுப்போம். அதிலும், தன் அவசரத்தால், கீழே கிடந்த மனிதரைப் பார்க்காமல், அவரை மிதித்துச் சென்ற அந்த மாணவரை நாம் இன்னும் அதிகம் கண்டனம் செய்வோம்.

நல்ல சமாரியர் உவமைக்குத் திரும்புவோம். அடிபட்டுக் கிடந்த மனிதரைக் கண்டு விலகிச் சென்ற குருவையும், லேவியரையும் குற்றம் சொல்ல நமது சுட்டும் விரல்கள் நீளும்போது, மற்ற விரல்கள் நம்மை நோக்கி நீண்டிருக்கும் என்று சென்ற வாரத் தேடலை நாம் நிறைவு செய்தோம். குரு என்றால், லேவியர் என்றால் இப்படித்தான் நடந்து கொள்வர், நடக்கவேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பின் அடிப்படையில் நம் தீர்ப்புக்களை வழங்கியிருப்போம். ஆனால், சூழலையும் இணைத்துச் சிந்திக்க வேண்டும் என்பதை நினைவுறுத்தவே மேற்சொன்ன பரிசோதனை. இத்தகையச் சூழல்களில் நாமும் அடுத்தவரைப்பற்றி அதிகம் சிந்திக்காமல் நமது உலகத்திலேயே மூழ்கியிருந்திருக்கிறோம் என்பதை நமக்கு நினைவுறுத்தவே இந்தப் பரிசோதனையை இங்கு பகிர்ந்து கொண்டேன்.

குருவும் லேவியரும் கோவில்பணியைத் தங்கள் வாழ்வின் மையமாக்கியதால் அடிபட்டுக் கிடப்பவரைத் தொடுவதற்கு அஞ்சி, விலகிச்சென்றனர் என்பதை சிந்தித்தோம். கோவில் பணியை விட, பிறரன்புப் பணிகள் எப்போதும், எச்சூழலிலும் முதன்மை இடம் பெறவேண்டும் என்று இஸ்ரயேல் இனத்தவர் வகுத்துக்கொண்ட Mitzvot கட்டளைகள் சொல்கின்றன என்பதையும் சிந்தித்தோம். இவ்வுவமை பற்றி ஒரு சில விரிவுரையாளர்கள் கூறும் விளக்கங்களில் விடுதலைப் பயண நூலில் கூறப்பட்டுள்ள ஒரு பகுதியை மேற்கோளாகக் காட்டுகின்றனர். விடுதலைப் பயண நூல் 23ம் பிரிவின் துவக்கத்தில் நாம் வாசிக்கும் வரிகள் இவைதாம்:

விடுதலைப் பயணம் 23 4-5
உன் பகைவரின் வழிதவறித் திரியும் மாடோ கழுதையோ உனக்கு எதிர்ப்பட்டால் நீ அதனை உரியவரிடம் கொண்டு சேர்த்துவிடு. உன்னை வெறுக்கும் ஒருவரின் கழுதை சுமையினால் படுத்துவிட்டதை நீ கண்டால், அந்நிலையில் அவரை விட்டகலாதே! அதைத் தூக்கிவிட அவருக்கு உதவிசெய்.

பகைவர் ஒருவரின் மாடு, கழுதை போன்ற மிருகங்களுக்கே உதவிகள் தேவைப்படும்போது அவற்றைச் செய்யவேண்டும் என்று மோசேயின் கட்டளைகள் வலியுறுத்தும்போது, அடிபட்டிருக்கும் ஒரு மனிதருக்குத் தேவையான உதவிகள் செய்யவேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? மோசேயின் கட்டளைகளில் பொதிந்துள்ள பிறரன்பு என்ற பாடத்தை குருவும், லேவியரும் மறந்துவிட்டனரா அல்லது மறுத்துவிட்டனரா என்ற பாணியில் அவர்கள் மீது நமது கண்டனங்களைச் சுமத்துகிறோம். கண்டனங்கள், தீர்ப்புக்கள், முற்சார்பு எண்ணங்கள் அனைத்தையும் புறம்தள்ளிவிட்டு, உவமைக்குத் திரும்புவோம். குருவும் லேவியரும் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதைச் சொல்லித்தர இயேசு இந்த உவமையைக் கூறவில்லை. எனக்கு அடுத்திருப்பவர் யார் என்று எழுப்பப்பட்டக் கேள்விக்கு பதில் அளிப்பதற்காக இயேசு கூறிய உவமை இது.

குரு, லேவியர் என்ற இவ்விருவரும் விலகிச் சென்றனர் என்று இயேசு குறிப்பிட்டதும், அதற்கு அடுத்து வருபவர், கட்டளைகளைக் கடைபிடிக்கும் இஸ்ரயேல் இனத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பை சூழ நின்றவர்களிடம் இயேசு உருவாக்கியிருப்பார். இயேசுவின் உவமைகளில் ஆச்சரியம் என்ற அம்சம் அதிகம் இருந்ததென்று நாம் அறிவோம். மக்கள் பழக்கப்பட்டுப்போன எண்ணங்களை தலைகீழாக மாற்றிய 'அதிர்ச்சி வைத்திய'த்தையும் தன் உரைகள், உவமைகள் வழியே இயேசு கொடுத்தார். அவர்களின் எதிர்பார்ப்பைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் விதமாக இயேசு ஒருவரை அறிமுகப்படுத்துகிறார். அவர்தான் அவ்வழியே வந்த சமாரியர்.

பல ஆண்டுகளாக அம்மக்களுக்குப் போதித்துவந்த மதத் தலைவர்கள் 'சமாரியரை'ப் பற்றி பேசியது கிடையாது. அப்படியே பேசினாலும், ஏளனமான தொனியில் அவர்களை அவமானப்படுத்தும் வகையிலேயே அவர்களைத் தங்கள் உரைகளில் குறிப்பிட்டனர் மதத் தலைவர்கள். எனவே, இயேசுவும் ஒரு சமாரியரைத் தன் உவமையில் அறிமுகப்படுத்தியதும், அவரைப் பற்றி இயேசு ஏளனமாகப் பேசுவார், அல்லது அவரும் தன் பணிகளைச் செய்யத் தவறினார் என்பதைச் சுட்டிக்காட்டுவார் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், இயேசு அவரை அறிமுகப்படுத்திய முதல் வார்த்தைகளிலேயே சூழ இருந்தவர்களுக்கு, முக்கியமாக, தன்னை ஒரு நேர்மையாளர் என்று காட்ட விரும்பி கேள்விகள் கேட்ட திருச்சட்ட அறிஞருக்கு சாட்டையடி காத்திருந்தது. சமாரியரை இயேசு அறிமுகப்படுத்தும் வார்த்தைகள் இவையே:
லூக்கா 10 33
ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.

நாம் வாசிக்கும் கதைகளில் 'ஆனால்' என்ற வார்த்தையைப் பார்க்கும்போது, கதையில் ஒரு மாற்றம் வருகிறது என்பதை புரிந்து கொள்கிறோம். 'ஆனால்' என்ற வார்த்தையுடன் இயேசு ஆரம்பித்ததுமே, அதுவரை அக்கதை சென்ற திசையில் ஒரு மாற்றம் நிகழ்கிறது என்பதை இயேசு உணர்த்திவிடுகிறார். அந்த மாற்றத்திலும் முற்றிலும் எதிர்பாராத திருப்பமாக, சமாரியர் ஒருவரை நன்மை செய்யும் நாயகனாக தன் கதையில் இயேசு அறிமுகப்படுத்தியது அதிர்ச்சியின் உச்சக்கட்டம் என்றே சொல்லவேண்டும். கதை சொல்வதில் இயேசுவை மிஞ்ச இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.

குரு, லேவியர், சமாரியர் என்ற இந்த மூவரின் மனங்களில் ஓடிய எண்ணங்களைப் பற்றி Martin Luther King Jr தன் உரையில் குறிப்பிடுகையில், ஒரு முக்கியமான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார். அடிபட்டுக் கிடந்தவரைக் கண்ட குருவுக்கும் லேவியருக்கும் மனதில் எழுந்த கேள்வி இதுதான்: "இந்த மனிதருக்கு நான் உதவி செய்தால், எனக்கு என்ன ஆகும்?" இந்தக் கேள்வி அவர்களை அடிபட்டவரிடமிருந்து விலகிச்செல்ல வைத்தது. இதற்கு நேர்மாறாக, அங்கு வந்தவர் சமாரியர். அடிபட்டவரைக் கண்டதும் அவர் மனதில் எழுந்த கேள்வி: "இந்த மனிதருக்கு நான் உதவி செய்யாவிட்டால், இவருக்கு என்ன ஆகும்?"
இந்த வேறுபாடுதான் முதல் இருவருக்கும், இறுதியில் வந்த சமாரியருக்கும் இடையே இணைக்க முடியாத ஒரு பாதாளத்தை உருவாக்கியது. அந்தச் சமாரியர்தான் இயேசு சொல்லித்தர விரும்பும் ஒரே பாடம். இந்த உவமையின் நாயகனான இந்த சமாரியரைப் பற்றி ஆழமாக நாம் புரிந்து கொள்ள முயல்வோம்.








All the contents on this site are copyrighted ©.