2013-04-02 15:25:30

6வது அகில உலக Autism விழிப்புணர்வு நாளுக்கென பேராயர் Zimowski வெளியிட்டுள்ள செய்தி


ஏப்.02,2013. பல வழிகளிலும் முன்னேற்றம் கண்டுள்ள நம் உலகில் Autism என்ற வார்த்தை இன்னும் பல கலாச்சாரங்களில் அச்சத்தைத் தரும் ஒரு சொல்லாகக் காணப்படுகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
Autism குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் அகில உலக நாள் ஆறாவது முறையாக உலகெங்கும் ஏப்ரல் 2ம் தேதி, இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி நலப் பணியாளர்களின் திருப்பீட அவை தலைவர் பேராயர் Zygmunt Zimowski வெளியிட்டச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த அகில உலக நாள் இவ்வாண்டு உயிர்ப்புத் திருவிழாவையொட்டி வந்திருப்பதால், இயேசுவின் பாடுகளைக் கண்டு மனமுடைந்து எருசலேம் நகரை விட்டு எம்மாவுஸ் நகர் நோக்கிச் சென்ற கிளயோப்பா, சீமோன் ஆகிய இரு சீடர்களை, Autism உள்ள குழந்தைகளின் பெற்றோருடன் ஒப்பிட்டுள்ளார் பேராயர் Zimowski.
அவ்விரு சீடர்களும் கலக்கத்துடன் வழிநடந்ததுபோல், Autism உள்ள குழந்தைகளின் பெற்றோரும் கலக்கத்துடன் வாழ்வுப் பாதையில் செல்கின்றனர் என்று பேராயர் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் சில நாட்களிலேயே மாற்றுத் திறனாளிகள் மீது அவர் காட்டியுள்ள பரிவும், அரவணைப்பும் உலகத்திற்கு ஒரு தலை சிறந்த சாட்சியாக உள்ளது என்பதையும் எடுத்துரைக்கும் பேராயர் Zimowski, நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டில் திருஅவையின் நலப் பணியாளர்கள் மக்களுக்கும் அதிக நம்பிக்கையை வழங்கும் கருவிகளாக இருப்பார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
மருத்துவத் துறையில் இவ்வுலகம் வியக்கத்தக்க பல முன்னேற்றங்களைக் கண்டிருந்தாலும், அம்முன்னேற்றங்கள் பெரும்பாலும் மருத்துவக் கருவிகள், மருந்துகள் என்று தொழில் நுட்ப அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்பதைச் சுட்டிக் காட்டும் பேராயர் Zimowski, நோயுற்றோர், அவரைச் சுற்றியுள்ளோர் அனைவரின் உள்ளங்களையும் புரிந்து செயல்படுவது மருத்துவத் துறைக்கு முன் உள்ள பெரும் சவால் என்று எடுத்துரைத்தார்.
உலகெங்கும் தற்போது 67 மில்லியன், அதாவது, 6 கோடியே 70 இலட்சம் பேர் Autism நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் சொல்கின்றன.

ஆதாரம் – வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.