2013-04-01 15:04:09

முடிவில்லாத கல்வாரியாகத் தெரியும் ஆப்கானிஸ்தான் நிலை விரைவில் உயிர்ப்பையும் காணவேண்டும் - அருள்தந்தை Moretti


ஏப்ரல்,01,2013. ஆப்கானிஸ்தான் நாட்டில் போர், வெறுப்பு, வறுமை என்ற பல துன்பங்களில் பங்கேற்கும் பல்லாயிரம் மக்கள் கிறிஸ்துவின் உயிர்ப்பிலும் பங்கேற்பர் என்ற நம்பிக்கையை வெளியிட்டார், அந்நாட்டில் பணிபுரியும் ஓர் அருள் பணியாளர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள இத்தாலிய தூதரகத்திற்குள் அமைந்துள்ள ஒரு சிறு பங்குதளத்தில் பணியாற்றும் அருள்தந்தை Giuseppe Moretti, முடிவில்லாத கல்வாரியாகத் தெரியும் அந்நாட்டின் நிலை விரைவில் உயிர்ப்பையும் காணவேண்டும் என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானில் இயங்கும் திருஅவை, முன்னைய காலத்தில் உரோம் நகரைச் சுற்றி புதைகுழிகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் வாழ்வை நினைவுருத்துகிறது என்று கூறிய அருள்தந்தை Moretti, இத்திருஅவையின் அமைதியான சாட்சிய வாழ்வு பலரையும் இறைவன் பாதத்திற்கு அழைத்து வருகிறது என்றும் கூறினார்.
99 விழுக்காடு இஸ்லாமியர்களைக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தானில் செயல்பட்டுவரும் அயல்நாட்டு இராணுவ வீரர்கள் மத்தியில் 6 பேர் ஆன்மீகக் குருக்களாகப் பணிபுரிகின்றனர்.
இந்த 6 அருள் பணியாளர்களும், புனித வியாழனன்று புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அருள் பணியாளர்களுக்கு விடுத்த சவால்களைக் கேட்டு தங்கள் பணியில் இன்னும் ஆழப்பட்டதாக அருள்தந்தை Moretti கூறினார் என்று ஆசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் – ASIANEWS








All the contents on this site are copyrighted ©.