2013-04-01 15:05:17

மத்தியக்கிழக்குப்பகுதி பிரச்சனைகள் குறித்து முதுபெரும் தலைவர் Twal


ஏப்.01,2013. அண்டைநாடுகளில் அகதிகளாக வாழும் சிரியா நாட்டு மக்கள் குறித்தும், வேறுநாடுகளில் குடியேற முயலும் மத்தியக்கிழக்குப்பகுதி கிறிஸ்தவர்கள் குறித்தும் தன் அக்கறையை வெளியிட்டுள்ளார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தலைவர் Fouad Twal.
மத்தியக்கிழக்குப்பகுதியில் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் திருஅவை குறித்து இந்த உயிர்ப்புவிழாத் திருப்பலி மறையுரையில் எடுத்துரைத்த முதுபெரும் தலைவர் Twal, மத்தியக்கிழக்குப்பகுதியின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக இருக்கும் பாலஸ்தீனியப் பிரச்சினைக்கு நீதியான தீர்வு காண சர்வதேச சமூகம் உதவவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.
மத்தியக்கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவராக வாழ்வது என்பது நாம் தேர்ந்துகொண்டதல்ல, மாறாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்றார் முதுபெரும் தலைவர் Twal.
பலவேளைகளில் வாழ்வுக்கு எதிரானதாகத் தோன்றும் சிலுவை, நமக்கு அச்சத்தைத் தரலாம், ஆனால் அது உண்மையல்ல, ஏனெனில் அன்பின் உன்னத வெளிப்பாடான சிலுவையே வாழ்வின் ஊற்றாக உள்ளது என்றார் அவர்.
தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டீனாவில் தான் சந்தித்தபோது, மத்தியக்கிழக்குப்பகுதியின் பிரச்சனை குறித்து விவாதித்ததாகவும், அப்பிரச்சினைகள் குறித்து தெரிந்துள்ள திருத்தந்தை, அதன் தீர்வுகளுக்காக உழைப்பார் என்பதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தலைவர் Twal.








All the contents on this site are copyrighted ©.