2013-03-31 14:09:51

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாஸ்காத் திருவிழிப்புத் திருப்பலியில் வழங்கிய மறையுரை


அன்பு சகோதர, சகோதரிகளே,

உயிர்ப்புத் திருவிழிப்பின் ஒளிமிகுந்த இரவில், இயேசுவின் உடலைக் கழுவிச் சுத்தம் செய்ய நறுமணப் பொருள்களுடன் கல்லறைக்குச் செல்லும் பெண்களை முதலில் நாம் சிந்திக்கிறோம். (லூக். 24:1-3) நம்மைவிட்டுப் பிரிந்த ஓர் அன்புள்ளத்திற்கு அன்புடனும், பாசத்தோடும் நாம் செய்யும் பாரம்பரியச் செயல்களைப்போல், இப்பெண்களும் கனிவு மிகுந்த ஒரு செயலைச் செய்வதற்குப் போகின்றனர். இப்பெண்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தவர்கள், அவரது சொற்களுக்குச் செவி மடுத்தவர்கள், அப்பெண்களின் உள்ளார்ந்த மாண்பை புரிந்துகொண்டவர் இயேசு என்பதால், அவருடன் இறுதிவரை உடன் சென்றவர்கள், சிலுவையிலிருந்து அவர் இறக்கப்படும் நேரம் வரை கல்வாரியில் உடன் இருந்தவர்கள். அவர்கள் வாழ்வு இனி முன்புபோல தொடரும். இருப்பினும், இப்பெண்கள் அவர் மீது அன்பு கொண்டிருந்தனர். அந்த அன்பே அவர்களைக் கல்லறைக்கு இட்டுச் சென்றது. ஆனால், இத்தருணத்தில், சற்றும் எதிர்பாராத, முற்றிலும் புதிதான ஒன்று நிகழ்ந்தது. அவர்களது உள்ளங்களையும், திட்டங்களையும் புரட்டிப் போட்டது போன்ற ஏதோ ஒன்று நிகழ்கிறது. அவர்கள் வாழ்வு முழுவதையும் இது புரட்டிப் போடும்: கல்லறையை மூடியிருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் காண்கின்றனர், நெருங்கிப் பார்க்கையில், ஆண்டவரின் உடலை அவர்கள் காணவில்லை. அவர்களைக் குழப்பத்திலும், தயக்கத்திலும் விட்டுச் சென்ற நிகழ்வு அது. "என்ன நிகழ்ந்தது?" "இவை அனைத்தின் பொருள் என்ன?" என்ற கேள்விகளால் அவர்களை நிறைத்த நிகழ்வு அது (லூக். 24:4).
முற்றிலும் புதிதான ஒன்று நம் தினசரி வாழ்வில் நடக்கும்போது, இதேபோல் நமக்கும் தோன்றுவதில்லையா? நாம் அப்படியே நின்று விடுகிறோம். நமக்கு ஒன்றும் புரிவதில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறோம். புதிது பல நேரங்களில் நம்மை பயமுறுத்துகிறது. கடவுள் கொணரும் புதியவைகளும், கடவுள் நம்மிடம் கேட்கும் புதியனவும் நம்மை பயமுறுத்தும். நற்செய்தியில் நாம் காணும் திருத்தூதர்களைப் போலவே நாமும், நம்முடைய பாதுகாப்பை உறுதியாகப் பற்றிக்கொள்ள விரும்புகிறோம். கல்லறைக்கு முன் நிற்க, இறந்த ஒருவரை நினைத்துப் பார்க்க, வரலாற்றில் வாழ்ந்து மறைந்த பெரும் மனிதரைப்போல், நினைவில் மட்டும் வாழக்கூடியவர் இவர் என்று நம்புவதற்கு நாம் விருப்பப்படுகிறோம். கடவுளின் ஆச்சரியங்களைக் கண்டு அஞ்சுகிறோம். ஆம், அன்பர்களே, கடவுளின் ஆச்சரியங்களைக் கண்டு நாம் அஞ்சுகிறோம். அவரோ நம்மை எப்போதும் ஆச்சரியம் அடையச் செய்கிறார். அதுதான் கடவுள்!

அன்பு சகோதர, சகோதரிகளே,

இறைவன் நம் வாழ்வில் கொணர விழையும் புதியனவற்றிற்கு நம்மை மூடிவிட வேண்டாம். நாம் களைத்து, மனம் சோர்ந்து, துயரப்படுகிறோமா? நமது பாவங்களின் சுமையால் அழுத்தப்படுகிறோமா? நம்மால் சமாளிக்க முடியாது என்று எண்ணுகிறோமா? இதயத்தை மூடிவிட வேண்டாம். நம்பிக்கை இழக்க வேண்டாம். ஒருபோதும் முயற்சியை விட்டுவிட வேண்டாம். கடவுளால் மாற்றமுடியாதச் சூழல் என்று எதுவுமே இல்லை. அவரால் மன்னிக்க முடியாத பாவம் என்று எதுவுமே இல்லை. நாம் அவரிடம் நம்மைத் திறந்தால் போதும்.

நாம் மீண்டும் நற்செய்திக்குத் திரும்புவோம். அந்தப் பெண்களைப் பற்றிய சிந்தனைகளை இன்னும் முன்னெடுத்துச் செல்வோம். கல்லறை காலியாக இருந்ததையும், அங்கு இயேசுவின் உடல் இல்லாததையும் அவர்கள் காண்கின்றனர். என்ன நடந்ததென்று உறுதியாகத் தெரியவில்லை. அச்சூழல் கேள்விகளை எழுப்பியது; பதிலேதும் தராத குழப்பத்தை உருவாக்கியது. அப்போது, திடீரென ஒளிவீசும் ஆடைகளுடன் இருவர் அங்கு தோன்றி, "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" (லூக். 24:5-6) என்று சொல்கின்றனர்.
கல்லறைக்குச் செல்லுதல் என்ற ஒரு சிறு செயல், வாழ்வையே மாற்றும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. இனி ஒன்றும் முன்புபோல இருக்கப்போவதில்லை - அப்பெண்களுக்கு மட்டுமல்ல, மனித குலத்தில் தோன்றிய அனைவருக்கும் இதே நிலைதான். இயேசு இறந்து கிடக்கவில்லை, அவர் உயிர்த்துள்ளார், அவர் உயிருடன் உள்ளார்! அவர் வாழ்வுக்கு மீண்டும் திரும்பவில்லை, அவர் வாழ்வாகவே மாறுகிறார், ஏனெனில் அவர் வாழும் கடவுளின் மகன். (எண். 14:21-28; இணை. 5:26; யோசு. 3:10). இயேசு இறந்தகாலத்தைச் சார்ந்தவர் அல்ல, அவர் நிகழ்காலத்தில் இருக்கிறார், எதிர்காலத்தில் இருக்கிறார். அவரே கடவுளின் நித்திய 'இன்று'. கடவுள் புதிதாய் உருவாக்கிய இது, அப்பெண்களுக்கும், சீடர்களுக்கும், நம் அனைவருக்கும் தோன்றுகிறது. பாவம், தீமை, மரணம் ஆகியவை மீது கொண்ட வெற்றியாக, வாழ்வையும், மனித மாண்பையும் நொறுக்கும் அனைத்தின் மீது கொண்ட வெற்றியாகத் தோன்றுகிறது. அன்புச் சகோதரியே, அன்பு சகோதரனே, இதுதான் எனக்கும் உங்களுக்கும் சொல்லப்பட்டுள்ள செய்தி. உயிரோடு இருப்பவரை இறந்தோரிடையே ஏன் தேடுகிறீர்கள் என்று எத்தனை முறை அன்பு நம்மிடம் சொல்ல வேண்டியுள்ளது!
நமது தினசரி பிரச்சனைகளும், கவலைகளும் நம்மைத் துயரிலும், கசப்பிலும் மூடிவிடுகின்றன. அங்குதான் மரணம் உள்ளது. வாழ்பவரை அவ்விடத்தில் தேடக்கூடாது. உயிர்த்த இயேசு உங்கள் வாழ்வில் நுழையட்டும். அவரை ஒரு நண்பராக வரவேற்று, அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அவரே வாழ்வு! இதுவரை தூரத்தில் அவரை வைத்திருந்தால், இப்போது அவரை நோக்கி வாருங்கள். அவர் உங்களை விரிந்த கரங்களுடன் வரவேற்பார். துணிந்து வாருங்கள், ஏமாற்றமடைய மாட்டீர்கள்.

ஒளிமிகுந்த இவ்விரவில் அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம். ஆண்டவரின் உயிர்ப்பில் நமக்கு ஒரு பங்களிக்க இறைவனை வேண்டுவோம். மாற்றம் கொணரும் புதியனவற்றிற்கு நம்மை அவர் திறப்பாராக. இவ்வுலகிலும், நம் வாழ்விலும் இறைவன் செய்தவற்றை நினைவிற்கொள்ளும் மனிதர்களாக நம்மை அவர் மாற்றுவாராக. உயிராற்றல் கொண்ட அவரது பிரசன்னத்தை உணர உதவுவாராக. வாழ்கின்ற அவரை இறந்தோர் மத்தியில் தேடாமல் இருக்க, ஒவ்வொரு நாளும் நமக்கு அவர் சொல்லித் தருவாராக. ஆமென்.

ஆதாரம் – வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.