2013-03-30 14:57:07

இயேசுவின் உடலைப் போர்த்திய புனிதத் துணியைத் தொலைக்காட்சியில் காண்போருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய ஒளிவடிவச் செய்தி


மார்ச்,30,2013. இயேசுவின் இறந்த உடலைப் போர்த்திய புனிதத் துணி இன்றளவும் இத்தாலியின் டூரின் நகரில் போற்றி பாதுகாக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. 1973ம் ஆண்டு இப்புனிதத் துணியை நேரடியாக தொலைக்காட்சியில் காண்பிக்க திருத்தந்தை 6ம் பவுல் அனுமதித்தார். இது நடந்து நாற்பதாண்டுகளுக்குப் பின்னர், இந்தப் புனிதத்துணியை மார்ச் 31, உயிர்ப்பு ஞாயிறன்று இத்தாலிய அரசுத்தொலைக்காட்சியான RAIயில் காண்பிக்க, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தான் திருத்தந்தையாக இருக்கும்போதே அனுமதி அளித்திருந்தார். தொலைக்காட்சியில் இந்நிகழ்வு இடம்பெறும் தருணத்தையொட்டி, புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள ஒலி-ஒளி செய்தி இதோ:

இயேசுவின் உடலைப் போர்த்திய புனிதத் துணியை, தொலைக்காட்சியின் வழியாகக் காணும் உங்கள் அனைவரோடு நானும் இணைகிறேன். இன்றையத் தொடர்புத்துறை முன்னேற்றங்கள் இதைச் சாத்தியமாக்குகிறது.

நாம் தொலைக்காட்சியின் வழியாகத் தொடர்பு கொண்டாலும், நாம் இத்திரு உருவத்தை உடலின் கண்கொண்டு மட்டும் நோக்கவில்லை, செபம் நிறைந்த ஒரு கண்ணோட்டத்துடன் இத்திரு உருவத்தை நாம் வணங்குகிறோம். இங்கு காணப்படும் முகத்தில் கண்கள் மூடப்பட்டுள்ளன. இறந்த ஒருவரின் முகம் இது. இருந்தாலும், புரிந்துகொள்ளமுடியாத ஒரு நிலையில் அவர் நம்மைப் பார்க்கிறார், மௌனத்தில் நம்முடன் பேசுகிறார். இது எவ்விதம் சாத்தியமாகிறது? கசையடி பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இவ்வுருவத்திற்கு முன், விசுவாசிகளாகிய நீங்கள் எதற்காக நேரம் செலவழிக்கிறீர்கள்? இவ்வுருவத்தில் பதிந்திருக்கும் மனிதர் நாசரேத்து இயேசுவைத் தியானிக்க நம்மை அழைக்கிறார். கல்வாரி மலையில் நாம் ஏறுவதற்கும், அங்கு இறைவனின் மௌனத்தில் மூழ்குவதற்கும் இத்துணியில் பதிந்துள்ள உருவம் நம்மை அழைக்கிறது.

இவ்வுருவத்தின் பார்வை நம் கண்களைக் காட்டிலும், நம் இதயத்தில் பதிவதற்கு நாம் அனுமதி அளிப்போம். மரணத்தையும் கடந்து, இவர் மௌனத்தில் சொல்லும் மொழிகளுக்குச் செவி மடுப்போம். மனுவான இறைவார்த்தை நம் வரலாற்றில் பிறப்பெடுத்து, உலகின் தீமையை ஏற்று, நம்மை விடுவித்ததை இப்புனிதத் துணி நமக்கு நினைவுருத்துகிறது. மனித மாண்பு மறுக்கப்பட்டு, போர்களாலும், வன்முறைகளாலும் காயப்பட்டிருக்கும் வலுவிழந்த மக்களின் முகத்தை, சிதைந்த இந்த முகம் சித்தரிக்கின்றது. அதேநேரம், இம்முகம் ஆழ்ந்த அமைதியை வெளிப்படுத்துகிறது. சித்திரவதை செய்யப்பட்ட இவ்வுடல் உயர்ந்ததோர் அரசத்துவத்தை வெளிப்படுத்துகிறது. உயிர்த்தெழுந்த ஒருவரின் சக்தி மூலம், இறையன்பின் சக்தி அனைத்தையும் வெல்லும் என்றும், எனவே நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் நமக்கு உரைக்கிறது.

அறையப்பட்ட கிறிஸ்துவின் உருவத்திற்கு முன், புனித பிரான்சிஸ் சொன்ன செபத்தை, இப்புனிதத் துணியில் பதிந்துள்ள மனித உருவத்திற்கு முன், என் செபமாக்குகிறேன்:
மிக உன்னதத்தில் வாழும் இறைவா, என் மனதிலுள்ள நிழல்களை வெளிச்சமாக்கும், சரியானதொரு விசுவாசத்தையும், நம்பிக்கையையும், உன்னதமான அன்பையும், புரிதலையும் எனக்குத் தாரும். இவ்வழியாக, உமது புனிதமான, சரியான கட்டளையை நான் நிறைவேற்ற வழிதாரும், ஆண்டவரே, ஆமென்.








All the contents on this site are copyrighted ©.