2013-03-29 13:08:16

புனித வியாழன் திருப்பலிக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இளம் கைதிகளும் சந்திப்பு


மார்ச்,29,2013. திருப்பலியின் இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில் தன்னை அவ்வில்லத்திற்கு அழைத்த நீதித்துறை அமைச்சர் Paolo Severino அவர்களுக்கு நன்றி கூறினார் திருத்தந்தை. பின்னர், நம்பிக்கையை இழக்கக்கூடாது, மற்றும் அவர்கள் நம்பிக்கையை வேறு யாரும் அபகரிக்க விடக்கூடாது என்று இளையோரிடம் திருத்தந்தை கூறினார்.
அவ்வேளையில் அங்கிருந்த ஓர் இளைஞர் திருத்தந்தையிடம் பேசினார்: "தந்தையே, இன்று நீங்கள் வந்ததற்காக நன்றி. ஆனால், நான் ஒன்றை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் ஏன் Casal del Marmoவுக்கு வந்தீர்கள்? சும்மா வந்தீர்களா?" என்று அவர் கேட்டதற்கு, திருத்தந்தை கூறிய பதில் இதுதான்:
என் மனதில் எழுந்த விருப்பத்தால் நான் இங்கு வந்தேன். ஓர் ஆயராக, அதே நேரம் ஒரு பணியாளராக நான் இருப்பதற்கு எது எனக்கு அதிகம் உதவி செய்யும்? நான் இன்னும் அதிகம் தாழ்ச்சியுடன் வாழ யார் எனக்கு உதவி செய்வார்கள்? என்று நான் சிந்தித்தபோது, CDM என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அதேநேரம் அமைச்சரின் அழைப்பும் வந்து சேர்ந்தது. எனவே நான் இங்கு வந்தது முற்றிலும் என் இதயத்தில் எழுந்த விருப்பத்தால் மட்டுமே. இதயம் சார்ந்த விருப்பங்களுக்கு விளக்கங்கள் கிடையாது என்று பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்பின்போது, அவ்விளையோர் மரத்தால் உருவாக்கிய ஒரு சிலுவையையும், முழந்தாள்படியிடும் ஒரு மணையையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தனர். திருத்தந்தையும் அங்குள்ள அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கி, பாஸ்கா வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆதாரம் – வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.