2013-03-29 13:06:31

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித வியாழனன்று வளர் இளம் கைதிகள் இல்லத்தில் வழங்கிய மறையுரை


மார்ச்,29,2013. இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவுகிறார். மனதைத் தொடும் ஒரு செயல் இது. பேதுரு இதைப் புரிந்துகொள்ளவில்லை, தன் பாதங்களை இயேசு கழுவுவதற்கும் அனுமதி தரவில்லை. இருப்பினும், இயேசு விளக்கம் அளிக்கிறார்.
"நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் 'போதகர்' என்றும் 'ஆண்டவர்' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்."
இயேசு நமக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டை விட்டுச்சென்றுள்ளார். நம் மத்தியில் யார் மிக உயர்ந்த அதிகாரத்தில் உள்ளனரோ, அவரே மற்றவருக்குப் பணிவிடை செய்யவேண்டும். பாதம் கழுவுதல் என்பது ஓர் அடையாளம். நான் உங்களுக்குப் பணிவிடை செய்ய வந்துள்ளேன் என்பதை உணர்த்தும் ஓர் அடையாளம். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பணிவிடை புரிய வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் மற்றவர்களின் பாதங்களைக் கழுவவேண்டும் என்பதல்ல. நாம் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்ய வேண்டும். சில வேளைகளில் நான் யாருடனாவது கோபமாக இருக்கலாம். ஆனால், அவர் ஓர் உதவி கேட்டு வரும்போது, அந்தக் கோபத்தைக் களைந்து, அவருக்கு நான் உதவி செய்யவேண்டும்.
ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள். இதைத்தான் இயேசு நமக்குச் சொல்லித் தருகிறார். இதைத்தான் நான் இப்போது செய்கிறேன். இதை என் முழு மனதுடன் செய்கிறேன். இது என் கடமை என்பதால் முழுமனதுடன் செய்கிறேன். ஏனெனில், ஒரு குருவாக, ஓர் ஆயராக நான் உங்களுக்குப் பணிவிடை புரியவேண்டும். இந்தக் கடமையை நான் மனதார விரும்புவதால் செய்கிறேன். ஆண்டவர் எனக்கு இதைச் சொல்லித் தந்ததால், நான் இதை விரும்பிச் செய்கிறேன். நீங்களும் எப்போதும் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்யவேண்டும். இவ்விதம் உதவிகள் செய்வதால், ஒருவருக்கொருவர் நன்மைகள் செய்கிறோம்.
இப்போது நாம் பாதம் கழுவும் சடங்கை ஆற்றுவோம். அந்நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டியது இததான்: நான் மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேனா? இதை மட்டும் எண்ணிப் பாருங்கள். இது இயேசு தரும் அணைப்பின் அடையாளம். அவர் இதற்காக மட்டுமே இவ்வுலகிற்கு வந்தார், நமக்குப் பணிவிடை புரிய, நமக்கு உதவி செய்ய.

ஆதாரம் – வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.