2013-03-27 15:48:44

திருத்தந்தை பிரான்சிஸ் வளர் இளம் கைதிகள் இல்லத்தில் நிறைவேற்றும் திருப்பலி, தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும்


மார்ச்,27,2013. புனித வியாழன் மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரில் உள்ள வளர் இளம் கைதிகள் இல்லத்தில் நிறைவேற்றும் திருப்பலி, திருத்தந்தையின் விருப்பத்திற்கிணங்க, ஊடகங்களின் தலியீடு இல்லாத தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் சார்பில், உரோம் நகர் ஆயராகப் பணியாற்றும் கர்தினால் Agostino Vallini அவர்களும், வளர் இளம் கைதிகள் இல்லத்தில் ஆன்மீகப் பணியாற்றும் அருள்தந்தை Gaetano Greco அவர்களும் மட்டுமே திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலியில் கலந்துகொள்வர்.
11 இளம்பெண்கள் உட்பட 50 இளம் கைதிகள் கலந்து கொள்ளும் இத்திருப்பலியில், திருத்தந்தை ஆற்றும் பாதம் கழுவும் சடங்கில் பங்கேற்க, வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 இளையோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பலிக்குப் பின் அவ்வில்லத்தில் உள்ள 150க்கும் அதிகமான இளையோரை, திருத்தந்தை சந்தித்துப் பேசுகிறார். இச்சந்திப்பின்போது, அவ்விளையோர் மரத்தால் உருவாக்கிய ஒரு சிலுவையையும், முழந்தாள்படியிடும் ஒரு மணையையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளிக்கின்றனர்.
திருத்தந்தையும் அங்குள்ள அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கி, பாஸ்கா வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
ஆதாரம் – வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.