2013-03-27 15:50:16

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மற்றும் முன்னேற்றப் பணிக்குழு வழங்கியுள்ள உயிர்ப்பு விழாச் செய்தி


மார்ச்,27,2013. மனிதர்கள் ஒவ்வொருவரும் முழுமையான வாழ்வில் மகிழும் வகையில், நீதியும் அமைதியும் நிலவும் புதிய சமுதாயம் என்ற பின்னணியில் மட்டுமே இயேசுவின் இறப்பையும் உயிர்ப்பையும் நாம் புரிந்துகொள்ள முடியும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் உயிர்ப்பு விழாச் செய்தி கூறியுள்ளது.
இப்பேரவையின் நீதி, அமைதி, மற்றும் முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Yvon Ambroise, மற்றும் இப்பணிக்குழுவின் உறுப்பினர்களான ஆயர் Mathew Arackal, மற்றும் ஆயர் Gerald Almeida ஆகியோருடன், செயலரான அருள்தந்தை Charles Irudayam அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள இச்செய்தியில், திருத்தூதர் பவுல் அடியார் எழுதிய திருமுகங்களின் வரிகள் மேற்கோளாகக் கூறப்பட்டுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குருத்து ஞாயிறன்று வழங்கிய மறையுரையின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டியுள்ள இச்செய்தி, இவ்வுலகில் நிலவும் பல்வேறு தீய சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டுமென்ற அழைப்பையும் விடுக்கிறது.
நமக்கு விடுதலை வழங்கும் கிறிஸ்துவுடன் இணைந்து, உலகை அடக்கி ஆளும் தீய சக்திகளுக்கு எதிராகப் போராடுவது ஒன்றே உண்மையான கிறிஸ்தவர்களின் அடையாளம் என்று மறைந்த பேராயர் Oscar Romero கூறியுள்ள வார்த்தைகளையும் தங்கள் செய்தியில் கூறியுள்ளனர் இந்திய ஆயர்கள்.

ஆதாரம் – CBCI








All the contents on this site are copyrighted ©.