2013-03-26 14:57:43

விவிலியத் தேடல் – 'நல்ல சமாரியர்' உவமை: பகுதி 6


RealAudioMP3 தவக்காலத்தின் துவக்கத்தில் 'நல்ல சமாரியர்' என்ற உவமைக் கடலுக்குள் காலடி எடுத்துவைத்த நாம், கடந்த ஐந்து வாரங்கள் இக்கடலில் ஓரளவு நனைந்துள்ளோம். இப்புனித வாரத்தில் மீண்டும் ஒருமுறை இக்கடலுக்குள் மூழ்குகிறோம். சென்ற விவிலியத் தேடலின் இறுதியில் நாம் சொன்ன ஒரு சிந்தனையை மீண்டும் நினைவுறுத்த விரும்புகிறேன். இந்த உவமையின் துவக்கத்தில் இயேசு குறிப்பிட்டிருந்த மனிதர் அடையாளம் தெரியாமல் அடிபட்டுக் கிடக்கும் பல கோடி மனிதர்களின் பிரதிநிதி என்பதைப் புரிந்துகொள்ள முயன்றோம். அடிபட்டவருக்கு நடந்தது என்ன? தொடர்கிறோம் நம் தேடலை...

யூதப் பாரம்பரியத்தில் சொல்லப்படும் புகழ்பெற்ற ஓர் உவமையை இங்கு நினைவு கூர்வது பயனளிக்கும். நமக்கு நன்கு தெரிந்த ஓர் உவமை இது.
மிக வயது முதிர்ந்த யூதகுரு ஒருவர் தன் சீடர்களிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டார்: "உலகில் தேவையான அளவு ஒளி உள்ளதென்று எப்போது சொல்லமுடியும்?" என்பதே அக்கேள்வி. "குறிப்பிட்டதொரு தூரத்தில் நின்றுகொண்டு, ஓடையில் உள்ள நீர் நிற்கிறதா? ஓடுகிறதா? என்று சொல்ல முடிந்தால் தேவையான அளவு ஒளி உள்ளது" என்று முதல் சீடர் பதிலளித்தார். குரு உடனே, "அது தேவையான அளவு ஒளி அல்ல" என்று பதில் தந்தார். இரண்டாவது சீடர், "ஒரு வேப்பமரத்திற்கும் ஒரு புளிய மரத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காண முடிந்தால், தேவையான அளவு ஒளி உள்ளதென்று சொல்லலாம்" என்று பதில் சொன்னார். குரு உடனே, "அது தேவையான அளவு ஒளி அல்ல" என்று சொன்னார். மூன்றாவது சீடர், "ஒரு செம்மறி ஆட்டையும், வெள்ளாட்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடிந்தால், தேவையான அளவு ஒளி உள்ளதென்று சொல்லலாம்" என்று பதில் சொன்னார். அதற்கும் அந்த குரு, "அது தேவையான அளவு ஒளி அல்ல" என்ற அதே பதிலைச் சொன்னார்.
தங்களுக்குத் தெரிந்த பதிலையெல்லாம் சொல்லிவிட்டதால், சீடர்கள் அனைவரும் குருவின் பதிலுக்குக் காத்திருந்தனர். அப்போது குரு அவர்களிடம், "மனிதர்கள் ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்க்கும்வேளையில், எப்போது அங்கு ஒரு சகோதரனையோ, சகோதரியையோ அவர்களால் அடையாளம் காணமுடிகிறதோ, அப்போதுதான் இவ்வுலகில் தேவையான அளவு ஒளி உள்ளதென்று சொல்லலாம்" என்று கூறினார்.

எந்த ஒரு மதமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உவமை இது. தேவையான ஒளி இருந்தால், வேறுபாடுகளைக் காணமுடியும் என்று சீடர்கள் பதிலளித்த வேளையில், குருவின் பதில் முற்றிலும் மாறுபட்டிருந்தது. ஒளி இருந்தால், வேற்றுமைகள் நீங்கி, ஒரு குடும்பம் என்ற உணர்வு எழும் என்பதை குரு வலியுறுத்தினார். உண்மையான மதங்கள் அனைத்துமே இறையன்பு, பிறரன்பு என்ற இரு தூண்களின் மீது எழுப்பப்பட்ட கோவில்களே. இவ்விரு தூண்களுக்கு முன் ஏனைய கடமைகளும், கட்டளைகளும் தலைவணங்க வேண்டும். இந்த உண்மையை வலியுறுத்த இயேசு கூறிய உவமைதான் நல்ல சமாரியர் உவமை.

அடையாளம் தெரியாதவாறு அடிபட்டுக் கிடந்த மனிதரை மூவர் கண்டனர் என்று இயேசு தன் உவமையைத் தொடர்கிறார். யார் இந்த மூவர்? ஒரு குரு, ஒரு லேவியர், ஒரு சமாரியர். இயேசு இந்த மூவரை ஏன் குறிப்பிட்டார் என்ற ஆர்வம் எனக்குள் எழுந்தது. எருசலேம், எரிகோ பாதையில் வேறு எத்தனையோ மனிதர்கள் பயணம் செய்திருக்கக்கூடும். அவர்களில் வேறு மூவரை இயேசு குறிப்பிட்டிருக்கலாமே! எடுத்துக்காட்டாக, ஒரு வர்த்தகர், ஒரு தொழிலாளி, ஒரு படைவீரர் என்று வேறு பலரைக் குறிப்பிடாமல், ஏன் ஒரு குரு, ஒரு லேவியர், ஒரு சமாரியர் என்ற இந்த மூவரை இயேசு குறிப்பிட்டார்? இரு காரணங்களை எண்ணிப் பார்க்கிறேன்.

முதல் காரணம்... இந்த மூவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆம், அன்புள்ளங்களே, சமாரியரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். குரு, லேவியர், சமாரியர் அனைவருமே ஒரே இனத்தவர். இவர்கள் அனைவருமே மோசே தந்த கட்டளைகளின்படி வாழ்க்கை நடத்துபவர்கள். இவர்கள் அனைவருக்கும் ஒரே கடவுள், ஒரே தந்தை ஆபிரகாம், ஒரே வகையான சட்ட வரையறைகள்தான். இந்த இனத்தைச் சேராதவர்கள் புறவினத்தார் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் உடன்பிறப்புக்களாக வாழ்ந்திருக்க வேண்டியவர்கள். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியொரு இனமான இவர்கள், தங்களுக்குள் உருவாக்கிக்கொண்ட பிரிவுகள்தான் இவர்களை ஒருவருக்கொருவர் பகைவர்களாக மாற்றியது. இந்தப் பகைமை உணர்வுகளை நேரடியாக அனுபவித்த இயேசு அவற்றைக் களையும் ஒரு முயற்சியாக இந்த மூவரைத் தேர்ந்தெடுத்திருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது.

இரண்டாவது காரணம்... சட்டங்களைக் கரைத்துக் குடித்திருந்த ஒரு சட்ட அறிஞர் கேட்ட கேள்விகளுக்கு இயேசு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை மீண்டும் நினைவில் கொள்வோம். சட்டங்களை அறிவது ஒரு புறம், அவற்றை பின்பற்றுவது மற்றொரு புறம். சட்டங்களைப் பின்பற்றுவதிலும் இரு வகை. கடுமையான முறையில் வார்த்தைக்கு வார்த்தை இம்மியளவும் பிறழாமல் சட்டங்களைப் பின்பற்றுவது ஒரு வகை. இதனை ஆங்கிலத்தில் 'following the letter of the law' என்று சொல்வார்கள். இதற்கு மாறாக, சட்டங்களின் உள் காரணங்களைப் புரிந்துகொண்டு, அவற்றை பின்பற்றுவது மற்றொரு வகை. இதை 'following the spirit of the law' என்று சொல்வோம்.
மோசே தந்த கட்டளைகள் இவர்கள் அனைவருக்குமே பொதுவானது என்பதால், எந்த ஒரு சூழலிலும் இவர்கள் மூவரும் அக்கட்டளைகளைப் புரிந்துகொள்வதிலும், அவற்றைப் பின்பற்றுவதிலும் காட்டிய வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டவும் இயேசு குரு, லேவியர், சமாரியர் என்ற மூவரையும் இங்கு குறிப்பிடுகிறார் என்று எண்ணிப் பார்க்கலாம். ஒரே வகையான சட்டங்களால் இவர்கள் வழி நடத்தப்பட்டால், ஏன் இந்த வேறுபாடான செயல்கள்? என்ற கேள்வி எழுகிறது. அடிபட்டுக் கிடக்கும் அடையாளம் தெரியாத மனிதரைக் கண்டு குருவும், லேவியரும் விலகிச்சென்றனர். சமாரியர் நெருங்கி வந்து உதவி செய்தார்.

விலகிச்சென்ற குருவையும், லேவியரையும் எண்ணும்போது நமக்குள் கோபமும் எரிச்சலும் உருவாவதை உணர்கிறோம். "ச்சே! என்ன மனிதர்கள் இவர்கள்! சிறிதும் மனிதாபிமானமற்ற, நெஞ்சில் ஈரமற்ற பிறவிகள்!" என்று தீர்ப்பு எழுத தயாராகிறோம். தயவுசெய்து நீதி இருக்கையை விட்டு எழுந்து வருவோம். தீர்ப்பு எழுதுவதற்கு முன், அவர்கள் நிலையில் நம்மை வைத்து சிந்திப்போம்.

"குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார்." (லூக்கா 10:31) என்று இயேசு இந்த உவமையில் குறிப்பிட்டுள்ளார். அடிபட்டுக் கிடப்பவர் 'எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் சென்றார்' என்பதைத் தெளிவாகக் குறிப்பிடும் இயேசு, இந்த குரு எங்கிருந்து எங்கு செல்கிறார் என்பதைக் குறிப்பிடவில்லை. அவர் ஒருவேளை எரிகோவிலிருந்து எருசலேமுக்குச் செல்லும் குருவாக இருந்திருக்கக்கூடும்.
அவர் எருசலேமுக்குச் செல்லும் குருவாக இருந்தால், முற்றிலும் தூய்மையான நிலையில் கோவிலுக்குள் செல்லவேண்டும். ஒருவேளை கோவிலின் மிகப் புனிதமான பகுதிக்குச் சென்று சடங்குகள் நடத்துவதற்கு செல்லும் குருவாக அவர் இருந்தால், இன்னும் கவனமாக இருக்கவேண்டும். இந்த அரிய வாய்ப்பு அவர்களுக்கு வருடத்தில் மிகக் குறைந்த நாட்களே கிடைக்கும். அந்த வாய்ப்பைக் கெடுக்கும் ஒரு சவாலையே அவர் வழியில் சந்திக்கிறார். அடிபட்டிருப்பவர் உயிருடன் இருந்தாரா இறந்துவிட்டாரா என்பதைக் கண்டுபிடிக்க குரு அருகில் செல்லவேண்டும். அங்கு கிடந்தவர் இறந்திருந்தால், அந்த உடலுக்கு அருகில் சென்றாலே தான் தீட்டுப் படுவோம், அந்தத் தீட்டை நீக்க தனக்கு பல நாட்கள் ஆகும்... இவ்வகை எண்ணங்கள் குருவின் மனதில் ஓடியிருக்கும். அவரைப் பின்தொடர்ந்த லேவியருக்கும் இதையொத்த நிலைதான்.

வழியில் அடிபட்டுக் கிடந்தவர் உயிரற்ற உடலாக இருந்தால், அவருக்கு அருகில் செல்வதோ, அவரைத் தொடுவதோ தங்களைத் தீட்டுப்படுத்தும் என்பதை இருவரும் உணர்ந்தவர்கள். மோசே தந்த சட்டத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:
லேவியர் 21:1
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: ஆரோனின் புதல்வரான குருக்களுக்குச் சொல்: அவர்களுள் எவனும் தன் இனத்தாரில் இறந்துபோன ஒருவராலே தன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம்.

மோசே தந்த கட்டளைகளில் இது ஒரு துளிதான். மற்றபடி வேறுபல சட்டங்களும், கட்டளைகளும் பிறரன்புக் கடமைகளைப்பற்றி பல பாடங்களைத் தந்தன. மோசே தந்த சட்டங்களின் அடிப்படையில் இஸ்ரயேல் இனத்தவர் 613 கட்டளைகளை வகுத்துக் கொண்டனர். இவை Mitzvot என்று அழைக்கப்பட்டன. இவற்றில் செய்யக்கூடாதது என்ற எதிர்மறை விதிகள் 365ம், செய்யக்கூடியது அல்லது செய்யவேண்டியது என்ற நேர்மறை விதிகள் 248ம் இருந்தன. குருக்களும், லேவியரும் எதிர்மறை விதிகளை மிக நுணுக்கமாகப் பின்பற்றியவர்கள்.
ஆனால், அவர்கள் இருவரும் மோசே சொல்லித் தந்த வேறு பல உயர்ந்த பாடங்களை மறந்தனரா, மறுத்தனரா என்பது தெரியவில்லை. Mitzvot கட்டளைகளின்படி, ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, அவருக்கு உதவுவது மிக மிக முக்கியம் என்பதும், அதேபோல், அனாதையாகக் கிடக்கும் ஓர் உடலை அடக்கம் செய்வதும் யூதர்களின் Mitzvot கட்டளைகளின் ஒரு பகுதி என்று Klyne Snodgrass என்ற விவிலிய ஆய்வாளர் கூறியுள்ளார்.

அடுத்தவர் தேவை, கோவில் தேவை என்ற இரு தேவைகளில் குருவும், லேவியரும் கோவில் தேவைகளுக்கு, கோவிலின் பெயரைச் சொல்லி அவர்கள் வளர்த்துக்கொண்ட தன்னலத் தேவைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்ததால், அவர்கள் விலகிச் சென்றனர்.
சுட்டும் வீரல் நீட்டி குருவையும், லேவியரையும் நாம் குற்றம் சொல்லும்போது, மற்ற விரல்கள் நம்மைச் சுட்டிநிற்பதையும் நாம் உணரவேண்டும். நம்மைச் சுட்டிநிற்கும் விரல்கள் நம்மிடம் சொல்ல விழைவது என்ன? தொடர்வோம் நம் தேடலை அடுத்த வாரம்.








All the contents on this site are copyrighted ©.