2013-03-26 15:45:47

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவிக்கவிருக்கும் முதல் புனிதர்கள்


மார்ச்,26,2013. மூன்று இறையடியார்களையும் 800 மறைசாட்சிகளையும் புனிதர்கள் என அறிவிக்கும் திருப்பலியை வருகிற மே மாதம் 12ம் தேதி நிகழ்த்தவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகப் பணியேற்ற பின்னர் நிகழ்த்தும் இத்தகைய முதல் திருப்பலி இதுவாக இருக்கும்.
இசுலாம் மதத்தைத் தழுவ மறுத்த காரணத்திற்காக இத்தாலியின் Otrantoவில் Antonio Primaldoவும், அவரோடு சேர்ந்து 800 பேரும் 15ம் நூற்றாண்டில் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து, கொலம்பியாவின் அன்னை Laura, மெக்சிகோ அருள்சகோதரி Maria Guadalupe Garcia Zavala ஆகிய இருவரையும் புனிதர் நிலைக்கு உயர்த்தவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறையடியார் அன்னை Laura, புனித அமலமரி மற்றும் புனித சியன்னா கத்ரீன் மறைபோதக சகோதரிகள் சபையை நிறுவியவர். கொலம்பியாவின் முதல் புனிதராக அறிவிக்கப்படவுள்ள இவர், பழங்குடி இன மக்களுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தவர்.
அன்னை Lupita என அழைக்கப்பட்ட அருள்சகோதரி Maria Guadalupe Garcia Zavala, புனித மார்கிரேட் மேரி மற்றும் ஏழைகள் பணியாளர்கள் சபையின் நிறுவனருக்கு உதவியவர்.
இவ்விறையடியார்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவது குறித்து கடந்த பிப்ரவரி 11ம் தேதி இடம்பெற்ற கர்தினால்கள் அவையில் இவர்கள் குறித்த விவரங்களை ஏற்று ஒப்புதல் அளித்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அந்தக் கூட்டத்தின் இறுதியில் தனது பதவி விலகலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : Romereports








All the contents on this site are copyrighted ©.