2013-03-26 15:56:21

உலகில் நவீன அடிமைத்தனம் ஒழிக்கப்பட ஐ.நா. வேண்டுகோள்


மார்ச்,26,2013. அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற அடிமை வியாபாரத்திற்குப் பலியான ஒரு கோடியே 50 இலட்சம் மக்களை இத்திங்களன்று நினைவுகூர்ந்த ஐ.நா.நிறுவனம், உலகில் இன்று இடம்பெறும் நவீன அடிமைத்தனம் ஒழிக்கப்படுமாறு வேண்டுகோள் விடுத்தது.
அடிமைத்தனம் மற்றும் அடிமை வியாபாரத்துக்குப் பலியானவர்களை நினைவுகூரும் அனைத்துலக நாளான இத்திங்களன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், நவீன அடிமைத்தனத்தின் கொடுமைகளால் இன்றும் துன்புறும் இலட்சக்கணக்கான மக்களின் நிலைமைகளை விவரித்தார்.
நாம் அடிமைத்தனத்தின் கொடுமைகள் குறித்துப் பேசும்போது அவற்றைக் களைவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும், அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைக்கும்போது, சமத்துவம், நீதி, மற்றும் அமைதிக்காக நாம் உழைக்க வேண்டும் என்றும் பான் கி மூன் கூறினார்.
1833ம் ஆண்டில் கனடாவிலும், West Indiesலும், நன்னம்பிக்கைமுனையிலும் அடிமைத்தனம் முடிவுற்றது. பிரான்சில் 165 ஆண்டுகளுக்கு முன்னரும், அர்ஜென்டினாவில் 160 ஆண்டுகளுக்கு முன்னரும், முன்னாள் டச்சு காலனிகளில் 150 ஆண்டுகளுக்கு முன்னரும், பிரேசிலில் 125 ஆண்டுகளுக்கு முன்னரும் அடிமைத்தனம் நிறுத்தப்பட்டது. ஏறக்குறைய 170 ஆண்டுகளுக்கு முன்னர், 1843ம் ஆண்டின் இந்திய அடிமைத்தன சட்ட எண் கையெழுத்தானது.
ஆதாரம் : ஐ.நா.செய்திகள்







All the contents on this site are copyrighted ©.