2013-03-25 15:59:43

கற்றனைத்தூறும்....போஸ்பொரஸ் பாலம்


போஸ்பொரஸ் பாலம், முதல் போஸ்பொரஸ் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இது 1973ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டபோது, உலகிலே நான்காவது மிக நீளமான இரும்புத் தொங்குபாலமாகவும், அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு வெளியே முதல் நீளமான தொங்குபாலமாகவும் இருந்தது. ஆனால் தற்போது உலகின் 21வது நீளமான இரும்புத் தொங்குபாலமாக இருக்கின்றது. போஸ்பொரஸ் பாலம், துருக்கி நாட்டின் இஸ்தான்புலில், போஸ்பொரஸ் ஜலசந்தியை இணைக்கும் இரு தொங்குபாலங்களில் ஒன்றாகும். இரண்டாவது தொங்குபாலம் Fatih Sultan Mehmet பாலமாகும். இந்த முதல் போஸ்பொரஸ் பாலம், ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது. இஸ்தான்புலின் ஐரோப்பியப் பகுதியிலுள்ள Ortaköy என்ற இடத்தையும், ஆசியப் பகுதியிலுள்ள Beylerbeyi என்ற இடத்தையும் இப்பாலம் இணைக்கிறது. போஸ்பொரஸ் பாலத்தைத் தாங்கி நிற்கும் இரும்புக் கயிற்றின் நீளம் 1,560 மீட்டர் மற்றும் இதன் அகலம் 33.40 மீட்டர். இப்பாலம், கடல் மட்டத்திலிருந்து 64 மீட்டர் உயரத்தில் உள்ளது. இப்பாலத்தின் தூண்களுக்கு இடைப்பட்ட தூரம் 1,074 மீட்டர். இந்தத் தூண்களின் மொத்த உயரம் 165 மீட்டர்.
கி.மு.522 முதல் கி.மு.485வரை ஆட்சி செய்த துருக்கிப் பகுதியை ஆண்ட பெர்சியப் பேரரசர் முதலாம் தாரியுஸ், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்குள் நுழைந்து பால்கன் நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பி, போஸ்பொரஸ் ஜலசந்தியில் பாலம் கட்ட விரும்பினார். பின்னர், 1900மாம் ஆண்டில் முஸ்லீம் பேரரசர் 2ம் அப்துல் ஹமித், இந்தச் ஜலசந்தியில் இரயில்பாதை அமைக்கத் திட்டமிட்டார். ஆயினும் 1957ம் ஆண்டில் பிரதமர் Adnan Menderes, இவ்விடத்தில் பாலம் கட்டுவதற்குத் தீர்மானித்தார். எனினும் கட்டுமானப் பணிகள் 1970ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டன. 35 பொறியியலாளரும் 400 தொழிலாளரும் சேர்ந்து இந்தப் போஸ்பொரஸ் பாலத்தை, 20 கோடி டாலர் செலவில் கட்டினர்.
துருக்கி குடியரசானதன் 50ம் ஆண்டு நிறைவுக்கு வந்த அடுத்த நாளான அக்டோபர் 30ம் தேதி, 1973ம் ஆண்டில் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இது திறக்கப்பட்டபோது ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் முதல் பாலம் என்ற பெயரைப் பெற்றது.







All the contents on this site are copyrighted ©.