2013-03-23 15:44:10

திருத்தந்தை பிரான்சிஸ், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சந்திப்பு


மார்ச்,23,2013. 120 கோடிக் கத்தோலிக்கரின் தலைவராக இம்மாதம் 13ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் ஒவ்வொரு நிகழ்விலும் வரலாறு படைத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்றும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்து வரலாறு படைத்துள்ளார்.
இச்சனிக்கிழமை வத்திக்கானிலிருந்து, காஸ்தெல் கந்தோல்ஃபோ அப்போஸ்தலிக்க மாளிகைக்கு, ஹெலிகாப்டரில் பகல் 12.15 மணியளவில் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஹெலிகாப்டர் தளத்திற்கே வந்து சந்தித்து வரவேற்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அங்கு திருத்தந்தை பிரான்சிஸ் வேகமாகச் சென்று, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைக் கட்டித் தழுவியது மிக நேர்த்தியாக இருந்தது என, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
அல்பானோ மறைமாவட்ட ஆயர் Marcello Semeraro, காஸ்தெல் கந்தோல்ஃபோ அப்போஸ்தலிக்க மாளிகையின் இயக்குனர் Saverio Petrillo ஆகியோரும் அங்கு இருந்தனர்.
இவ்விரு திருத்தந்தையரும் ஒரே காரில் அப்போஸ்தலிக்க மாளிகை சென்று முதலில் சிற்றாலயத்தில் சிறிது நேரம் செபித்தனர். அவ்வாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கென தனியே போடப்பட்டிருந்த இடத்தில் அமருமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கைகாட்ட, அதற்கு திருத்தந்தை பிரான்சிஸ், நாம் சகோதரர்கள் என்று சொல்லி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன் ஒரே இருக்கையில் முழங்கால்படியிட்டுச் செபித்தார். பின்னர் அங்குள்ள நூலகத்தில் இவ்விரு திருத்தந்தையரும் ஏறக்குறைய 45 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினர்.
பகல் 13.15 மணியளவில் மதியவுணவு உண்ட பின்னர், மீண்டும் ஹெலிகாப்டரில் காஸ்தெல் கந்தோல்ஃபோவிலிருந்து வத்திக்கான் வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமைக்கு தென்கிழக்கே, 24 கிலோ மீட்டரில் அமைந்துள்ள மலைப்பாங்கான சிறிய ஊர் காஸ்தெல் கந்தோல்ஃபோ. இவ்வூரிலுள்ள திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான அப்போஸ்தலிக்க மாளிகையில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தற்போது வாழ்ந்து வருகிறார்.







All the contents on this site are copyrighted ©.