2013-03-23 14:53:30

கற்றனைத் தூறும் - சூறாவளி


ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 1000 சூறாவளிகள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாகின்றன. உலகில் உருவாகும் சூறாவளிகளில் இது 75 விழுக்காடு ஆகும். மே, ஜூன் மாதங்களிலேயே இவை அதிகம் உருவாகின்றன. 1950ம் ஆண்டு முதல் சூறாவளிகளின் எண்ணிக்கை அமெரிக்க ஐக்கிய நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பதிவின்படி, 2003ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும், அந்நாட்டில் 543 சூறாவளிகள் பதிவாயின.
இந்நாட்டின் தென் எல்லையில் உள்ள Texas மாநிலத்திற்கும், வட எல்லையில் உள்ள வட Dakota மாநிலத்திற்கும் இடையே நேர்கோட்டில் அமைந்ததுபோல் உள்ள மாநிலங்கள் அதிகமான சூறாவளிகள் கடந்து செல்லும் பாதையாக அமைந்துள்ளன.
சூறாவளி நேரத்தில் வீசும் சுழல் காற்றின் வேகமும் சக்தியும் வியப்பூட்டுவன. ஒருமுறை Oklahoma மாநிலத்தில் இருந்த ஒரு சாலையோர உணவு விடுதி (Motel) அடியோடு தூக்கிச் செல்லப்பட்டு, அதன் பகுதிகள் பல இடங்களில் வீசப்பட்டன. அவ்வுணவு விடுதியின் பெயர் பலகை அடுத்த மாநிலமான Arkansasல் கண்டுபிடிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு Mississippi மாநிலத்தில் வீசிய சூறாவளி, 83 டன் எடையுள்ள சரக்கு இரயில்பெட்டித் தொடர் ஒன்றை 80 அடி தூரத்திற்குத் தூக்கிச்சென்று வீசியது.
இதுவரை பதிவு செய்யப்பட்ட சூறாவளிகளில், 1989ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பங்களாதேஷின் Daulatpur, Saturia ஆகிய நகரங்களைத் தாக்கிய சூறாவளியில் 1300க்கும் அதிகமானோர் இறந்தனர் என்பதே அதிக உயிர்களைப் பலிவாங்கிய சூறாவளியென்று சொல்லப்படுகிறது. 1925ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் மூன்று மாநிலங்கள் வழியே கடந்துசென்ற ஒரு சூறாவளி 695 பேரின் உயிரைப் பறித்ததே அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அதிகப்படியான உயிர் பலியாகும்.








All the contents on this site are copyrighted ©.