2013-03-22 16:41:00

உலகின் காடுகள் பாதுகாக்கப்படுமாறு ஐ.நா. பொதுச்செயலர் அழைப்பு


மார்ச்,22,2013. காடுகள் அழிக்கப்படுவதையும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதையும் நிறுத்தி, சுற்றுச்சூழலைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமாறு அரசுகள், வணிகர்கள், மற்றும் பொதுமக்கள் சமுதாயத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
மார்ச்,21, இவ்வியாழனன்று முதல் அனைத்துலக காடுகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள பான் கி மூன், உலகின் மூன்றில் ஒரு பகுதியாக இருக்கும் காடுகள் நமது சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு விலைமதிப்பில்லாத நன்மைகளை வழங்குகின்றன என்று கூறியுள்ளார்.
இவ்வுலகின் விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவைகளுக்கு காடுகள் வாழ்விடமாக இருக்கின்றன எனவும், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பழங்குடி இனக் கலாச்சாரங்கள் உட்பட ஏறக்குறைய 160 கோடி மக்கள் தங்களது வாழ்வுக்குக் காடுகளையேச் சார்ந்துள்ளனர் எனவும் பான் கி மூன் கூறியுள்ளார்.
உலகில் கிடைக்கும் சுத்தமான தண்ணீரில் நான்கில் ஒரு பகுதி காடுகளில் கிடைக்கின்றன என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ள பான் கி மூன், நில அரிப்பு, நிலச்சரிவு, சுனாமி, புயல் ஆகியவற்றினின்று காடுகள் மக்களைக் காப்பாற்றுகின்றன என்றும், ஆண்டுதோறும் ஏறக்குறைய ஒரு கோடியே 30 இலட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.