2013-03-22 16:37:32

இயேசுவில் நம்பிக்கை இழப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆங்லிக்கன் பேராயர் Welby எச்சரிக்கை


மார்ச்,22,2013. மக்களனைவரும் ஒருவர் ஒருவருக்குப் பாதுகாவலர்களாக இருக்குமாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, கான்டர்பரியின் புதிய ஆங்லிக்கன் பேராயர் Justin Welby அவர்களும், இப்பூமியில் இறைமக்கள் சமுதாயத்தைக் கட்டியெழுப்புமாறு தனது சபையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தின் கான்டர்பரியின் பேராயராக இவ்வியாழனன்று பொறுப்பேற்றுள்ள பேராயர் Justin Welby, தனது பணியேற்பு திருவழிபாட்டு நிகழ்வில் ஆற்றிய உரையில், கடவுளின் அதிகாரத்தின்கீழ் மட்டுமே, நாம் அனைவரும் கனவு காணும், முழுவதும் மனிதம் நிறைந்த ஒரு சமுதாயமாக நாம் மாற முடியும் என்று கூறினார்.
இயேசுவில் நம்பிக்கை இழப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் எச்சரித்தார் பேராயர் Welby.
உலகின் ஏறக்குறைய 7 கோடியே 70 இலட்சம் ஆங்லிக்கன் கிறிஸ்தவர்களின் தலைவராகப் பொறுப்பேற்ற இந்நிகழ்வில் பிரிட்டன் பிரதமர் David Cameron, இளவரசர் சார்லஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், ஆங்லிக்கன் பேராயர் Justin Welby அவர்களின் இப்பணியேற்பு நிகழ்வையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.