2013-03-18 16:10:12

வாரம் ஓர் அலசல் – மன்னிப்பதில் சோர்வுற வேண்டாம்


மார்ச்.18,2013 RealAudioMP3 . Sue Norton என்பவர் அமெரிக்க ஐக்கிய நாட்டு Kansas மாநிலத்தில் Arkansas நகரத்தில் வாழ்ந்து வருபவர். 1990ம் ஆண்டு சனவரியில் Sueவின் சகோதரரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. Sue மிகவும் அன்புகூர்ந்த அவரது தந்தை Richard Dennyயும், அவரது மனைவியும் அவர்களது Oklahoma பண்ணை வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதே அத்தொலைபேசியில் Sue கேட்ட செய்தி. இச்செய்தியைக் கேட்டதும் Sue அதிர்ச்சியில் உறைந்து போனார். ஏழைகளான அந்த முதியவர்களை ஏன் கொலை செய்தனர் என்பதை Sueவால் புரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வளவுக்கும் அந்தக் கொலையாளிக்குக் கிடைத்தது வெறும் 17 டாலரும் ஒரு பழைய லாரியும்தான். தந்தையின் இழப்பைத் தாங்க முடியாமல் குமுறிக் குமுறி அழுதார் Sue. அவரது தந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட கொலையாளி Robert Knighton அன்றைய தினம் நீதிமன்ற விசாரணைக்கு வரவேண்டியிருந்தது. இராபெர்ட்டை எப்படி எதிர்கொள்வது என்று குழம்பினார் Sue. ஆனால் உறவினர்கள் முகத்தில் வெறுப்புணர்வு தெரிந்தது. Sueவும் அவ்வாறே உணர வேண்டுமென்று அவருக்கு நெருக்கமானவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் Sueவால் அப்படியிருக்க முடியவில்லை. வெறுப்புணர்வு நல்லது எதையும் செய்யாது என்று சொன்னார் Sue. அந்த நாளுக்கு முந்திய இரவு Sueவால் சாப்பிடவும் தூங்கவும் முடியவில்லை. இறைவனிடம் செபித்தார். காலையில் எழுந்தபோது Sueவுக்கு ஓர் எண்ணம் உதித்தது.
Sue, நீ Robert Knightonஐ வெறுக்கத் தேவையில்லை. அவரை மன்னித்துவிடு
என்ற எண்ணம் மனதில் எழுந்தது. அடுத்தநாள் அதிகாரியின் அனுமதியுடன் சிறைக்குச் சென்று இராபெர்ட்டைச் சந்தித்தார். சிறைக்குச் செல்வது Sueவுக்கு அதுதான் முதல் அனுபவம். உயரமாக, பெரிய சிவந்த கண்களுடன் இருந்த இராபெர்ட்டைப் பார்க்கவே முதலில் Sueவுக்குப் பயமாக இருந்தது. ஆயினும் துணிச்சலுடன் சென்றார். ஆனால், இராபெர்ட், Sueவைப் பார்க்கவே விரும்பவில்லை.
தவறு செய்த என்னை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்?
என்று இராபெர்ட் கேட்டார். அதற்கு Sue,
உன்னை நான் வெறுக்கவில்லை என்பதை நீ தெரிந்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். வெறுப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தவே கூடாது, நாம் ஒருவர் ஒருவரை அன்பு செய்யவே இவ்வுலகில் இருக்கிறோம் என எனது பாட்டி சொல்லிக் கொடுத்திருக்கிறார். எனவே உன்னை நான் மன்னிக்கிறேன்
என்று சொன்னார் Sue. இராபெர்ட்டுக்கு இதை நம்பவே முடியவில்லை, புரிந்து கொள்ளவும் முடியவில்லை. ஏதோ Sue விளையாடுகிறார், இவ்வளவு பெரிய குற்றவாளியை எப்படி மன்னிக்க முடியும் என்று நினைத்தார். ஆனால் Sue அவரிடம்,
நான் உன்னைக் கொலை செய்தவராக இல்லை, மனிதராகப் பார்க்கிறேன்
என்றார். Sueவின் நண்பர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஆனாலும் Sue,
நாம் வாழ்க்கையில் மன்னித்து மறக்க வேண்டும். இயேசு அதைத்தான் செய்தார்
என்று உறுதியாகச் சொன்னார். அந்தக் கைதி இராபெர்ட்டையும் அடிக்கடி சிறையில் சென்று சந்தித்தார் Sue. Cherie Carter-Scott சொன்னார் : “கோபம் உன்னைக் குறுகிநாணச் செய்யும், ஆனால் மன்னிப்போ நீ இருக்கும் நிலையைவிட்டு மேலே வளர உன்னைத் தூண்டும்” என்று. அன்பு நெஞ்சங்களே, மன்னிப்பைப் பொருத்தவரை, நம் ஒவ்வொருவர் வாழ்க்கையும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அன்றாட வாழ்வில், கோபப்படுவதற்குப் பல சூழல்கள் உருவாகின்றன. கோபத்தை உடனடியாக வெளிப்படுத்திய பின்னரே, ச்சே.. கொஞ்சம் அமைதியாக இருந்திருக்கலாமே என்று சிந்திக்கிறோம். ஒரு கோப வார்த்தை பலருடைய உயிருக்கே உலை வைத்திருக்கிறது. ஒருவர் ஒருவரை விரும்பித் திருமணம் செய்த தம்பதியர்கூட, மனைவி கோபத்தில் ஒரு வார்த்தை சொன்னார் என்பதற்காக, கணவர் தற்கொலை செய்து கொண்ட ஒரு குடும்பம் பற்றி எனக்குத் தெரியும். முதல் குழந்தை தனது மனைவியின் வயிற்றில் வளர்ந்து வருகிறது என்பதுகூட அந்தக் கணவரின் தற்கொலை முடிவை மாற்றவில்லை. அன்பர்களே, கோபக்கார ஆள் என்று சிலர் எளிதில் பெயர் எடுத்து விடுகிறார்கள். அலுவலகத்தில் பிரச்சனை என்று வீட்டுக்கு வந்தால் அங்கும் உடனடியாகப் பிரச்சனை. கணவன் மனைவியால், மனைவி கணவரால், பிள்ளைகள் பெற்றோரால், பெற்றோர் பிள்ளைகளால் மறுதலிக்கப்பட்டதாக, புறக்கணிக்கப்பட்டதாகத்தான் உணருகிறோம். அதனால் எரிச்சலும் கோபமும் வருகின்றன. ஒரு கட்டம் வரும்போது தாய் மகனிடம், அப்பாவிடம் மன்னிப்புக் கேள் என்று சொல்வார். இப்படி ஒருவர் கோபமாகவோ, வருத்தமாகவோ இருக்கும்போது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற உணர்வு ஏறக்குறைய எல்லாருக்கும் வருகிறது. மன்னிப்புக் கேட்டுவிட்டால் அங்கு உறவு கட்டப்படுகிறது. அன்பு வளருகிறது. வாழ்க்கையில் அன்பு இல்லையென்றால் வாழும் இடம் நரகமாகிவிடும்.
ஒருவரது மனதைப் புண்படுத்தியிருந்தால், அவருடன் நல்லுறவில் நிலைத்திருக்க விரும்பி அவரிடம் மன்னிப்பை எதிர்பார்க்கிறோம். அப்படி ஒருவர் மன்னிப்புக் கேட்கும்போது மன்னிப்பவர் மட்டுமல்ல, மன்னிப்புப் கேட்பவருக்குள்ளும் நல்ல உணர்வுகள் உருவாகின்றன. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதும், மன்னிப்புக் கேட்பதும் சாதாரண வாழ்வுமுதல் அரசியல் வாழ்வுவரை இடம்பெறுவதை அடிக்கடி செய்தித்தாள்களில் வாசிக்கிறோம். கடந்த வாரச் செய்திகளில்கூட,
மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அனிசூர் ரகுமான், சட்டசபையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்...
பிரதமர் மன்மோகன் சிங்கை 'இரவு காவலர்' என்று விமர்சித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அவருக்கு வக்கீல் நோட்டீஸ்...
தேசியக் கீதத்தை அவமதித்ததாக கூறப்பட்ட புகாரில் மத்திய இணையமைச்சர் சசிதரூர் 5 வருடங்களுக்குப்பிறகு மன்னிப்பு கேட்டுள்ளார்.
அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலா பாக் பூங்காவுக்குச் சென்ற பிரித்தானிய பிரதமர், அங்கே 1919ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து மன்னிப்புக் கேட்கவில்லை, ஜாலியன்வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்டோரின் உறவினர்கள் குறை...
போன்ற செய்திகள் வெளியாகின. தவறுகள் நடக்கும்போது ஒரு நாடு அடுத்த நாட்டிடம் மன்னிப்புக் கேட்கின்றது. கத்தோலிக்கத் திருஅவையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகளுக்கு அண்மைக் காலத் திருத்தந்தையர் மன்னிப்புக் கேட்டுள்ளனர். இப்படிக் கேட்கும்போது முறிந்த உறவுகள் மீண்டும் கட்டப்படுகின்றன. ஒருவர் மன்னிக்கப்படத்தக்கவர் என்பதற்காக மன்னிப்பு கொடுக்கப்படுவதில்லை. ஆனால் மன்னிப்பு என்பது ஒருவரின் அன்பு, கருணை, அருள் ஆகிய பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு நற்செயலாகும். மன்னிப்பு என்பது, பிறர் நமக்கு என்ன செய்திருந்தாலும் அவருக்கு எதிராக மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதற்குக் காட்டும் ஒரு நற்செயலாகும். மன்னிப்பு என்பது, கடந்தகாலத் தவறுகளை மறந்து புதிய காரியங்களைச் செய்யத் தொடங்குதல் என்றும் சொல்லலாம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறன்று நிகழ்த்திய திருப்பலியிலும், பகல் 12 மணிக்கு வத்திக்கான் பேதுரு வளாகத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு ஆற்றிய முதல் மூவேளை செப உரையிலும் மன்னிப்பையே மிகவும் வலியுறுத்திப் பேசினார். அவர் உரையாற்றிய ஒருசில நிமிடங்களுக்குள் ஒருதடவை மட்டுமல்ல, மூன்று தடவைகளுக்குமேல் மன்னிப்பை வலியுறுத்திப் பேசினார். மூவேளை செப உரையை நிறைவு செய்து மக்களிடமிருந்து விடைபெறும்போதும்,
இறைவன் மன்னிப்பதில் ஒருபொழுதும் களைப்படைவதில்லை. நாம்தான் மன்னிப்புக் கேட்பதில் களைப்படைகிறோம் என்பதை மறக்க வேண்டாம்
என்று சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ RealAudioMP3 ். ஒருவர் மன்னிப்புக் கேட்கும்போது அவரை மன்னிப்பவரைவிட அதிகம் பலன்பெறுபவர் மன்னிப்புக் கேட்பவரே. அவரிடமிருந்த குற்ற உணர்வுகள், பகைமை, வெறுப்பு, பயம், கோபம், தாழ்வுமனம் ஆகிய எதிர்மறை குணங்கள் மறைந்து அவரில் நல்ல பண்புகள் நிறையும்.
Louise L. Hay என்ற உளவியல் எழுத்தாளர், All Dis-ease comes from a State of Unforgiveness என்று சொல்கிறார். மனிதருக்கு ஏற்படும் அனைத்து நோய்களும் மன்னிப்பின்மை என்ற நிலையிலிருந்து ஏற்படுகின்றன என்று சொல்கிறார் Hay.
நாம் நோயுற்று இருக்கும்போது, யாரை நாம் முதலில் மன்னிக்க வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். நாம் மன்னிக்க வேண்டிய அந்த நபர் நாமாகவேக்கூட இருக்கலாம். நாம் செய்த செயல்கள் நமக்கே பிடிக்காமல் இருக்கலாம். நமது உடல் அமைப்பு, நமது குணங்கள், நாம் இருக்கும் சமூகநிலை போன்றவை நமக்குப் பிடிக்காமல் நம்மையே நாம் வெறுத்துக் கொண்டு இருக்கலாம். ஏனெனில் மன்னிப்பு என்பது, நமது மனத்தை அரித்துக்கொண்டும், உறுத்திக்கொண்டும் இருப்பதையும், அவ்வாறு இருக்கும் எண்ணங்களையும் மனத்திலிருந்து முழுவதுமாக வெளியேற்றி விடுவது, மன்னிப்பு என்பது நமது சிந்தனையை எப்போதும் மொய்த்துக் கொண்டிருக்கும் தகாத எண்ணங்களை நமது சிந்தையிலிருந்து போக்கி விடுவது. விருப்பமில்லாத நபரையோ, விருப்பமில்லாத ஒன்றையோ மனத்தில் வைத்துக் கண்டனம் செய்து கொண்டிருப்பது அல்ல, ஆனால் மனத்தை உறுத்திக்கொண்டு, மனத்தை வருத்திக்கொண்டு இருப்பதை மனத்தைவிட்டு முற்றிலும் நீக்கி விடுவதே மன்னிப்பு. எப்படி மன்னிக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் மன்னிப்பதற்கு நல்ல மனம் இருந்தாலே போதும். மற்றதை, திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியது போல, கருணைநிறை இறைவன் பார்த்துக் கொள்வார். மன்னிப்பில் களைப்படையாத நம் அன்பு வானகத்தந்தை அதைச் செய்வார்.
நமது நோய்களின் வேதனைகளை நன்றாகப் புரிந்து கொள்கிறோம். நோய்களினால் கஷ்டப்படுகிறோம். ஆனால் அந்த நோய்களுக்கான மூலகாரணம் நம்மிலே இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதற்கு நம்மில் பலர் கஷ்டப்படுகிறோம். நாம் யாரையெல்லாம் மன்னிக்க வேண்டுமோ அவர்களுமே வேதனையில் இருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுமே நம்மை வருத்தப்படுத்திய அந்த நேரத்தில் தாங்கள் செய்ததை நினைத்து வருந்திக் கொண்டிருப்பார்கள். அதைப் புரிந்துகொள்ளவும் முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். யார் யார் தங்களையும் தங்களது உடலையும் உண்மையிலே ஏற்று அன்பு செய்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தங்களையும், மற்றவரையும் குறைசொல்ல மாட்டார்கள் என்று சொல்கிறார் Hay.
அன்புள்ளங்களே, எல்லா குற்றங்களையும் மன்னிக்கும் ஒரே நீதிமன்றம் அம்மாவின் இதயம் என்பார்கள். அன்பும் கருணையும் பரிவும் நிறைந்த தாயுள்ளம் கொண்டவர்களே எளிதில் மன்னிப்பு எனும் நற்பண்பைக் கொண்டிருக்க முடியும். எனவே மன்னிக்க வேண்டியவர்களை மன்னிப்போம். மன்னிப்புக் கேட்பதில் சோர்வுறாதிருப்போம். மற்ற அனைத்தையும் மன்னிப்பதில் சோர்வடையாத இறைவன் பார்த்துக் கொள்வார். மன்னிப்பு குறித்து சிந்திப்பதற்கு இந்தத் தவக்காலம் ஏற்ற காலமாகும்.







All the contents on this site are copyrighted ©.