2013-03-18 16:06:53

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கேடய அடையாளமும் விருதுவாக்கும்


மார்ச்,18,2013. இயேசுசபையினர் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வமான அடையாளத்தையும், "எளியவராயினும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்" என்ற விருதுவாக்கையும், திருத்தந்தை பிரான்சிஸ் தன் கேடய அடையாளமாகப் (Coat of Arms) பயன்படுத்துகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Argentinaவில் Buenos Aires பேராயராகப் பணியேற்றபோது பயன்படுத்திய அடையாளத்தையும், வார்த்தைகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் தொடர்ந்து பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
IHS என்ற மூன்று எழுத்துக்களும், அவற்றை சுற்றி அமைந்துள்ள கதிர்போன்ற அடையாளங்களும் இயேசு சபையினரின் அதிகாரப்பூர்வமான அடையாளம். அதற்குக் கீழ் ஒரு விண்மீனும், ஒரு மலரும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை, அன்னை மரியாவையும், புனித யோசேப்பையும் குறிப்பன.
வரிதண்டும் பணியில் இருந்த புனித மத்தேயுவை அன்புடன் பார்த்து, அவரைத் தன்பின்னே வரும்படி இயேசு அழைத்த நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டு, "எளியவராயினும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்" என்ற வார்த்தைகளை தன் பேராயர் பணிக்கென திருத்தந்தை தேர்ந்திருந்தார் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசுசபை அருள்தந்தை Federico Lombardi செய்தியாளர்களிடம் விளக்கினார்.
1953ம் ஆண்டு புனித மத்தேயு திருநாளன்று, அப்போது 17 வயது நிரம்பியவரான தற்போதையத் திருத்தந்தை, தன் துறவற அழைப்பை உணர்ந்ததால், அந்த நிகழ்வைக் குறிக்கும் வார்த்தைகளைத் தன் பணிவாழ்வின் விருதுவாக்காக மேற்கொண்டார் என்றும் அருள்தந்தை Lombardi விளக்கிக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.