2013-03-16 16:35:26

திருத்தந்தை பிரான்சிஸ் : இந்நவீன காலத்துக்கு ஊடகங்களின் பங்களிப்பு முக்கியம்


மார்ச்,16,2013. இந்நவீன காலத்தில் ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதையும், இன்றைய சமுதாயத்தின் நிகழ்வுகளை எடுத்துச் சொல்வதற்கு ஊடகங்கள் எவ்வளவு இன்றியமையாதவை என்பதையும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட ஊடகவியலாளரை இச்சனிக்கிழமை காலை 11 மணிக்கு வத்திக்கானிலுள்ள திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்நாள்களில் ஊடகவியலாளர் ஆற்றியுள்ள பணிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.
திருஅவை, இவ்வுலகின் போக்குக்குப் பதில் சொல்ல முடியாது, ஏனெனில் அதன் இயல்பு அரசியல் சார்ந்தது அல்ல, மாறாக அது ஆன்மீகம் சார்ந்தது என்றும் விளக்கிய திருத்தந்தை, திருஅவையின் மையமாக இருப்பவர் கிறிஸ்துவே, பேதுருவின் வழிவருபவர் அல்ல, கிறிஸ்து இன்றி பேதுருவும் திருஅவையும் வாழ முடியாது என்றும் கூறினார்.
திருஅவையை அதன் புண்ணியங்கள் மற்றும் பலவீனங்களோடு ஏற்க வேண்டுமென்றும், அதன் உண்மை, அழகு, நன்மைத்தனம் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறும் உலக ஊடகவியலாளரைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
அசிசி நகர் புனித பிரான்சிசின் பெயரைத் தான் தேர்ந்து கொண்டது குறித்தும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், புனித பிரான்சிஸ் ஏழ்மை, அமைதி, படைப்பின்மீது பற்று ஆகியவற்றைக் கொண்டிருந்தார் எனவும் கூறினார் திருத்தந்தை.
ஏழைகளுக்கான ஏழைத் திருஅவையைத் தான் விரும்புவதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.







All the contents on this site are copyrighted ©.