2013-03-16 15:44:16

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 வத்திக்கானுக்குத் திரும்புவோம் வாருங்கள். சென்ற வாரம் வத்திக்கானை விட்டு வெளியேறுவோம் என்று சிந்தித்தோம். அதற்கு முக்கிய காரணம், புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் 'கான்கிளேவ்' கர்தினால்கள் அவை விரைவில் துவங்கவிருந்தது. திருஅவையின் தலைவர் யாராக, எப்படிப்பட்டவராக, எந்த நாட்டினராக, எந்த வயதினராக இருக்கவேண்டும் என்று ஊடகங்களும், உலக அரசியல் பாணியில் சிந்தித்த அறிஞர்களும் பல்வேறு கணிப்புக்களை, கருத்துக்களைப் பரப்பிவந்தனர். அந்தக் கருத்துக்களால் பாதிக்கப்படாமல், தூய ஆவியாரை நம்பி 'கான்கிளேவ்' அவைக்குள் கர்தினால்கள் செல்லவேண்டும் என்ற வேண்டுதலுடன் நாம் வத்திக்கானைவிட்டு வெளியேறினோம். இப்போது, வத்திக்கானுக்குள் திரும்புகிறோம். ஏனெனில், ஒரு புதியத் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மார்ச் 13 வரை சொல்லப்பட்ட பல கருத்துக்களை முற்றிலும் புரட்டிப் போட்டதுபோல், கர்தினால்கள் புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று சொன்னால், அது மிகையல்ல.

திருஅவையின் 266வது தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், 'முதல்' என்ற வார்த்தையைத் தனக்கே உரிமையாக்கிக் கொண்டதுபோல் தெரிகிறது. அமெரிக்கக் கண்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் திருத்தந்தை இவர். திருத்தந்தை என்ற பொறுப்பை ஏற்கும் முதல் இயேசு சபை துறவி இவர். 'பிரான்சிஸ்' என்ற பெயரை ஏற்கும் முதல் திருத்தந்தை. நமது சிந்தனைகளின்போது இன்னும் பல வழிகளில் இவர் முதன்மையானவர் என்பதை உணர வாய்ப்புண்டு.
மார்ச் 13, புதன் மாலை 5.30 மணிக்கு, சிஸ்டின் சிற்றாலயத்தில் கூடியிருந்த கர்தினால்களின் 'கான்கிளேவ்' அவையில் நான்காவது வாக்கெடுப்பு முடியும் என்று கணித்து மக்கள் கூட்டம் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் வளாகத்தை நிறைத்தது. விடாமல் மழை பெய்துகொண்டிருந்தாலும், ஆயிரக்கணக்கான மக்கள் சிஸ்டின் சிற்றாலயக் கூரையில் அமைந்திருந்த புகைப்போக்கியைப் பார்த்தவண்ணம் நின்றுகொண்டிருந்தனர்.

நானும் அவர்களில் ஒருவன். 6.00 மணி வரை எந்த முடிவும் வரவில்லை. அடுத்த வாக்கெடுப்பின் முடிவு 7 மணிக்கு மேல் தெரியும் என்பதால், நான் அவ்விடம் விட்டு அகன்றேன்.
நான் அங்கு காத்திருந்த 15 அல்லது 20 நிமிடங்களில் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல்மாடத்தை ஏதோ முதல் முறை பார்ப்பதுபோல் ஆழ்ந்து பார்த்தேன். சிவப்பு, வெள்ளை ஆகிய திரைகள் மாட்டப்பட்டு காட்சியளித்த அந்த மாடத்தில் புதியத் திருத்தந்தை முதல் முறையாக மக்களுக்குத் தோன்றுவார் என்பது தெரியும். அந்த மாடத்தைப் பார்த்தபோது, திடீரென எனக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. இத்தனை ஆயிரம் சாதாரண மக்கள் இங்கு நிற்கின்றனரே, இவர்களில் ஒருவர் அங்கு ஏறி நிற்க முடியுமா? என்பதே அந்த எண்ணம். அந்த எண்ணம் அடுத்த சில மணி நேரங்களில் நிஜமாகும் என்று அப்போது நான் எண்ணிப் பார்க்கவில்லை.

ஆம், கான்கிளேவ் அவையின் 5வது வாக்கெடுப்பு முடிந்து, 7.05 மணிக்கு வெள்ளைப் புகை வெளியானது. புதியத் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்ற அவ்வடையாளத்தைக் கண்டதும் மக்களிடம் எழுந்த ஆரவாரம் அழகான ஓர் அனுபவம். இச்செய்தி பரவியதும், வளாகத்தில் கூடிய கூட்டம் இன்னும் பல்லாயிரமாக உயர்ந்தது. நானும் அவர்களில் ஒருவன். இரவு 8 மணி அளவில், மேல்மாடத்தில் தோன்றிய கர்தினால் Jean Louis Tauran, இலத்தீன் மொழியில், "Habemus Papam", அதாவது, "தந்தையைப் பெற்றுள்ளோம்" என்று அறிவித்தார். ஆம், அன்புள்ளங்களே, அவர் சொன்ன வார்த்தைகளின் நேரடி மொழிபெயர்ப்பு இதுதான் - நாம் ஒரு தந்தையைப் பெற்றுள்ளோம். 'papam' என்ற சொல் வரலாற்றில் 'திருத்தந்தை' என்ற பதவியைக் குறிக்கும் சொல்லாக மாறி, அந்த ஒரு பொருளே தற்போது நிலவுகிறது. நாம் உண்மையில் பெற்றிருப்பது ஓர் எளிமையான தந்தையே என்பதை அடுத்த சில நிமிடங்களில் மக்கள் உணர்ந்தனர்.

"திருத்தந்தையைப் பெற்றுள்ளோம்" என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, கர்தினால் Tauran புதியத் திருத்தந்தையின் பெயரை அறிவித்தார். "கர்தினால் Jorge Mario Bergoglio அவர்களே நமது புதியத் திருத்தந்தை. அவர் 'பிரான்சிஸ்' என்ற பெயரைத் தேர்ந்துள்ளார்" என்று அவர் அறிவித்தார். புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களில் பலருக்கு அவர் அறிவித்த கர்தினால் யார் என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால், அவர் 'பிரான்சிஸ்' என்ற பெயரைத் தெரிவு செய்துள்ளார் என்ற செய்தி மகிழ்வைத் தந்தது.
அடுத்த ஐந்து நிமிடங்கள் சென்று, சிலுவை ஏந்திய ஒருவர் முன்னே வர, அவருக்குப் பின், வெள்ளை அங்கி அணிந்து மேல்மாடத்திற்கு வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கர்தினால் Bergoglio, இயேசு சபையைச் சார்ந்தவர் என்பது தவிர எனக்கு அவரைப்பற்றி எதுவும் தெரியாது. அவர் முகத்தைக்கூட இதுவரை நான் பார்த்ததில்லை. தென் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களைத் தவிர, வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரம் மக்களுக்கும், தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த பல கோடி மக்களுக்கும் இவர் முதன்முறையாக அறிமுகமாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தொடர்ந்த 15 அல்லது 20 நிமிடங்கள் அங்கு நிகழ்ந்தவை இன்னும் பல ஆச்சரியங்களைச் சுமந்து வந்தன. திருத்தந்தையர் பொதுவாக முதல்முறை மக்கள் முன் தோன்றும்போது அணியும் ஆடம்பரமான சிவப்பு மேலுடையையோ, தங்கத்தால் ஆன சிலுவையையோ அணியாமல், வெறும் வெள்ளை அங்கியின் மேல் சாதாரண சிலுவை அணிந்து தோன்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
எளிமையான இத்தாலிய மொழியில் மக்களிடம் உரையாடுவதுபோல் அமைந்திருந்தது அவரது முதல் உரை. தனக்கு முன்னர் தலைமைப் பொறுப்பிலிருந்த 16ம் பெனடிக்ட் அவர்களுக்காகச் செபிக்கும்படி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், வானகத் தந்தை, அருள்நிறை மரியே, மூவொரு இறைவன் புகழ் என்ற எளிய செபங்களை மக்களோடு சேர்ந்து செபித்தார். புதியத் திருத்தந்தையைக் காணவேண்டும் என்ற ஆவலில் அந்த வளாகத்தில் உருவாகியிருந்த விழாக்கோலம் மாறி, ஒரு செப வழிபாட்டில் கலந்துகொள்ளும் அனுபவம் மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது.

திருத்தந்தை பிரான்சிஸ் தொடர்ந்து பேசிய எண்ணங்கள் இவைதாம்: "உரோமையின் ஆயராகிய நான், உங்களோடு சேர்ந்து இவ்வுலகப் பயணத்தில் கலந்துகொள்கிறேன். உங்களுக்கும், உலகில் உள்ள அனைத்து நல்மனதோருக்கும் என் சிறப்பு ஆசீரை (Urbi et Orbi) வழங்கவிருக்கிறேன். ஆனால், அதற்கு முன் உங்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன்" என்று அவர் சொன்னதும், அங்கிருந்த மக்கள் அமைதியாயினர்.
இதைத் தொடர்ந்து, புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் சொன்னதும் செய்ததும் எந்த ஒரு திருத்தந்தையும் செய்யாத ஒன்று என்று உறுதியாகச் சொல்லமுடியும். வயதில் முதிர்ந்த பலரும் என் கருத்தை உறுதி செய்தனர். திருத்தந்தை தொடர்ந்து பேசியது இதுதான்: "ஓர் ஆயர் தன் மக்களை ஆசீர்வதிப்பதற்குமுன், மக்களாகிய நீங்கள் உங்கள் ஆயருக்காக, எனக்காக இறைவனிடம் அமைதியாகச் செபியுங்கள்" என்று சொன்னபின், அற்புதமான ஒரு செயலை திருத்தந்தை செய்தார். மேல்மாடத்தில் மக்களுக்கு முன் அவர் தலைவணங்கி நின்றார்.

1,50,000க்கும் அதிகமாய் அங்கிருந்த மக்கள் முழு அமைதியில் செபித்தது அற்புதமான ஓர் அனுபவம். இந்தக் காட்சியை நேரடி ஒளிபரப்பில் பார்த்துக்கொண்டிருந்த பல கோடி மக்களும் அந்நேரம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகச் செபித்திருப்பார்கள். மதம், இனம், மொழி என்ற அனைத்து எல்லைகளையும் கடந்து அந்த ஒரு சில மணித்துளிகள், மக்களின் செபங்களுக்காக விண்ணப்பித்து, அனைவர் முன்னிலையில் புதியத் திருத்தந்தை தலைவணங்கி நின்றது இதுவரை யாரும் கண்டிராத முதல் அனுபவம். விழித்திருந்த பாதி உலகை அந்தச்சில மணித்துளிகள் செபத்தில் அவர் இணைத்தது என்னைப் பொருத்தவரை ஒரு புதுமையே.
உலக ஊடகங்கள் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்தன என்ற எண்ணமே இல்லாமல், ஏதோ ஒரு பங்கு மக்களைச் சந்தித்து உரையாற்றும் பங்குதந்தை போல அவர் பேசியதைக் கேட்டபோது, 120 கோடி கத்தோலிக்க மக்களின் தலைவர், மக்கள் முன் தலைவணங்கி நின்றபோது, வெகு சாதாரண அருள்பணியாளர் ஒருவர் அந்த மேல்மாடத்தில் நிற்கிறார் என்ற உண்மை எனக்குப் புலனானது. மாலை 5.30 மணிபோல அந்த மேல்மாடத்தைப் பார்த்தபோது எனக்குள் எழுந்த கேள்விக்கு விடை கிடைத்ததைப்போல் உணர்ந்தேன்.

புதன் இரவு மட்டுமல்ல, வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களும் அவர் ஆற்றிய அனைத்துச் செயல்களிலும், அவர் வழங்கிய அனைத்து உரைகளிலும் தாழ்ச்சியும், எளிமையும், ஆழ்ந்த ஆன்மீகமும் வெளிப்பட்டன என்பதை மறுக்கமுடியாது. இதுவரை, திருத்தந்தை பிரான்சிஸ் குறித்து வெளிவந்துள்ள கருத்துக்களெல்லாம் பொதுவாக நல்லவைகளாகவே இருந்தாலும், இங்கொன்றும் அங்கொன்றுமாக நல்லவை அல்லாத ஒரு சில செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஊடகங்களுக்கே உரிய ஒரு பாணி இது என்று சொல்ல முடியும். அதே நேரம், இதை நம்மிடம் உள்ள ஒரு குறைபாடு என்றும் எண்ணிப் பார்க்க வேண்டும். நம்மைச் சுற்றி நாலாபக்கமும் நல்லவைகள் நடக்கும்போது, அவற்றைப் போற்றி வளர்ப்பதற்குப் பதில், ஏதாவது ஒரு மூலையில் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்தும் நம் மனித இயல்பை நாம் ஆய்வு செய்யவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த வாசகம் தாங்கிய ஒரு புகைப்படம் இப்போது என் நினைவுக்கு வருகிறது. அந்தப் படத்தில், உடற்பயிற்சி செய்யும் ஒருவர் இணையான இரு இரும்புச் சட்டங்களில் (parallel bars) இரு கைகளை ஊன்றி, உடலை மேலெழுப்பி நிற்கிறார். உருண்டு திரண்டிருக்கும் வலுவான அவரது இரு கைகளும் அவரது உடல் பாரத்தைத் தாங்கிய வண்ணம் உள்ளன. ஆனால், இளம்பிள்ளைவாத (polio) நோயினால் தாக்கப்பட்டு, வலுவிழந்த அவரது இரு கால்களும் துணிபோல் தொங்குகின்றன. அந்தப் படத்திற்குத் தரப்பட்டுள்ள வாசகம் இதுதான்: "Look at my strength; not my weakness", அதாவது, "என் வலிமையைப் பாருங்கள்; என் குறையை அல்ல".
இதற்கு நேர்மாறான வழிமுறை, வத்திக்கானையும் சேர்த்து, திருஅவையின் பல்வேறு நிறுவனங்களிலும், துறவு சபைகளிலும், காணப்படுகிறது என்பது வேதனை தரும் உண்மை. இந்த அவலமான வழிமுறையைப் பின்பற்றி, புதியத் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றிருக்கும் பிரான்சிஸ் அவர்களின் கடந்தகால வாழ்வைப் பல கோணங்களில் ஆய்வுசெய்து, அங்கு காணப்பட்ட குறைகளை, பொறுப்பற்ற முறையில் வெளிச்சம் போட்டுக்காட்டும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.
இதுமட்டுமல்லாமல், திருத்தந்தை பிரான்சிஸ் சேர்ந்திருந்த இயேசு சபையைப் பற்றிய அரைகுறையான கருத்துக்களையும் ஒரு சிலர் வெளியிட்டு வருவதைக் காண முடிகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் பதவியேற்று முழுதாக ஒரு வாரம் கூட முடியாத நிலையில், அவரைப்பற்றியும் அவர் சார்ந்திருந்த இயேசு சபையைப்பற்றியும் முற்சார்பு எண்ணங்களுடன் அவசரமாக வெளியிடப்படும் இந்த அரைகுறையான எண்ணங்களைக் கண்டு சிரிப்பதா, வேதனைப்படுவதா என்று தெரியவில்லை. இவ்விதம் செய்யப்படும் முயற்சிகள் என்ன சாதிக்கப்போகின்றன என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி.

குறைகளையே பெரிதுபடுத்தும் நம் இயல்பை, விரைவாகத் தீர்ப்பு வழங்கும் நம் இயல்பை இன்றைய நற்செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது. இயேசுவை எப்படியும் வெல்லவேண்டும் என்ற வெறியில் ஒரு பெண்ணை பகடைக் காயாகப் பயன்பத்திய மறைநூல் அறிஞரும், பரிசேயரும் வேறு யாருமல்ல... நாம் அனைவருமே!
இயேசு அன்று சொன்னதையே இன்று நம்மைப் பார்த்தும் சொல்வார்: "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்". இயேசுவின் இவ்வார்த்தைகளை நான் இவ்விதம் எண்ணிப்பார்க்கிறேன்: "உங்களில் யார்தான் குறையின்றி வாழ்கிறீர்கள்? நாம் அனைவருமே குறையுள்ளவர்கள்தான். எனவே, குறைகளில் உங்கள் கவனத்தைச் செலுத்தாமல், நல்லது செய்வதில், வீழ்ந்து கிடப்போரைத் தூக்கி எழுப்புவதில் கவனம் செலுத்துங்கள்".

இயேசு இன்று நம்மிடையே வந்தால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ஆசீர்வதித்து, "நன்கு ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்கள் உங்கள் நற்பணியை" என்றுதான் சொல்வாரே தவிர, அவரது கடந்த வாழ்வில், பணியில் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்தமாட்டார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தன் குறைகளை ஏற்றுக் கொள்வதில் சிறிதும் தயங்க மாட்டார் என்றே நம்புகிறேன். ஆனால், குறைகளில் நம் கவனம் செல்லாமல், நமக்கு முன் நீண்டிருக்கும் பயணத்தை அனைவருமே இணைந்து மேற்கொள்வோம் என்று நம் கவனத்தை பயணத்தின் மீது திருப்புவார் என்று எதிர்பார்க்கிறேன். நம்மை வழிநடத்த வந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மைப்போல் ஒரு சாதாரண மனிதர்தான்; ஆனால், இவ்வேளையில் ஒரு புனிதமான பணிக்கென அழைக்கப்பட்டிருப்பவர் என்ற எண்ணம் நமக்குள் மேலோங்கவும், தலைமை ஆயரின் பணியைத் அவர் திறம்படச் செய்யவும் தூய ஆவியாரை இறைஞ்சுவோம்.








All the contents on this site are copyrighted ©.