2013-03-16 16:50:35

அனைத்துலகத் தலைவர்கள் திருத்தந்தைக்கு வாழ்த்து


மார்ச்.16,2013. திருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்க விழுமியங்களுக்கும் ஏழைகள்மீதான கரிசனைக்கும் தன்னை அர்ப்பணித்திருப்ப்தைக் குறிப்பிட்டுத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் பல அனைத்துலகத் தலைவர்கள்.
பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிவு செய்துள்ள அர்ஜென்டினாவின் Buenos Aires கர்தினால் Jorge Mario Bergoglio அவர்களுக்கும், அனைத்துக் கத்தோலிக்கருக்கும் தனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ள ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கும், திருப்பீடத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பு தொடரும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
பல்சமய உரையாடலை ஊக்குவிப்பதில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மரபுரிமையை திருத்தந்தை பிரான்சிசும் தொடர்வார் என்று தான் நம்புவதாகவும் ஐ.நா.பொதுச்செயலர் கூறியுள்ளார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ், துணிச்சலும் வலிமையும் பெற வேண்டுமென்று வாழ்த்தியுள்ள ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் Martin Schulz, உலகின் கோடிக்கணக்கான மக்களுக்கு, வழிகாட்டுதலையும் தூண்டுதலையும் நம்பிக்கையையும் வழங்குகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.