2013-03-15 15:40:03

மார்ச் 16, 2013. கற்றனைத்தூறும்...... மதம்


இன்றைய உலகில் 80 விழுக்காட்டினர் மத நம்பிக்கையுடையவர்களாக உள்ளனர் என அண்மை ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை இந்த நவீன காலத்தில் குறையவில்லை என்பது இதிலிருந்து தெரிய வரும் உண்மை. ஆபிரகாம் வழி வந்த சமயங்கள், தென் ஆசியாவிலும் கிழக்கு ஆசியாவிலும் தோன்றிய மதங்கள், பாரசீகச் சமயங்கள், ஆப்ரிக்க- அமெரிக்க பழங்குடி மக்களின் நம்பிக்கைகளை உள்ளடக்கிய மதங்கள், தற்காலத்தில் தோன்றிய சமய நம்பிக்கைகள் என எத்தனையோ மதங்களும் அதன் உட்பிரிவுகளும் இன்று நூற்றுக்கணக்கில் உள்ளன. அதிக மக்களால் பின்பற்றப்படும் மதங்கள் என்ற வரிசையில் பார்த்தோமானால் கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து, புத்தம், சீக்கியம், யூதம் என வரிசை தொடர்கிறது. அங்கத்தினர்கள் எண்ணிக்கையில் முதல் பத்து இடங்களில் இருக்கும் மதங்கள் அனைத்தும் ஆசியாவில் பிறந்தவையே. மதங்களின் வரிசையில் முதலில் தோன்றிய இந்து மதம் கி.மு. 4000க்கும் 2500க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பிறந்தது. கி.மு. 2000ல் மத்தியக்கிழக்குப் பகுதியில் யூதமும், கி.மு.1000மாம் ஆண்டில் பெர்ஷியாவில் சொராஷ்டிரியனிசமும், கி.மு. 560 முதல் 490க்கு இடைப்பட்டக்காலத்தில் இந்தியாவில் புத்தமதமும், ஏறத்தாழ அதே காலத்தில் ஜப்பானில் ஷிந்தோ மதமும், கி.மு. 500ல் சீனாவில் கன்ஃபூசியம் மதமும், கி.மு.420ல் இந்தியாவில் சமணமும் பிறந்துள்ளன. கி.பி.30ல் கிறிஸ்தவமும், கி.பி.622ல் இஸ்லாமும், கி.பி 1500ல் சீக்கியமும் 1863ல் பாஹாய் மதமும் பிறந்தன என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.