2013-03-15 16:50:27

திருத்தந்தை பிரான்சிஸ் இன்னும் தனது எளிய பழைய வாழ்வுமுறையே பின்பற்றுகிறார்


மார்ச்,15,2013. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், உலகின் 120 கோடிக் கத்தோலிக்கரின் தலைவராக இருந்தாலும், தாழ்மையும் எளிமையும் நிறைந்த தனது வழிகளையே தொடர்ந்து பின்பற்றி வருகிறார் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி இவ்வெள்ளியன்று நிருபர் கூட்டத்தில் கூறினார்.
தற்போது சாந்தா மார்த்தா இல்லத்தில் தங்கியிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், சாப்பாட்டு மேஜைக்கு வந்தவுடன் மற்ற கர்தினால்கள் அமர்ந்திருக்கும் மேஜையில் காலியான இடத்தில் அமரவே விரும்புகிறார் என்றும், அவருக்கென ஒதுக்கப்ப்ட்டுள்ள இடத்திற்குச் செல்வதில் விருப்பம் காட்டவில்லை என்றும், அவ்வில்லத்தின் இயக்குனர் கூறியதாக, அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தை தேர்தலுக்கு முன்னர் தங்கியிருந்த இல்லத்தில் தனது பொருள்களை எடுத்துவருவதற்கு இவ்வியாழன் காலையில் சென்றபோது, அங்குப் பணி செய்கிறவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது எனவும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ், தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அன்று இரவில் அர்ஜென்டினா திருப்பீடத் தூதர் பேராயர் Emil Paul Tscherrigயைத் தொலைபேசியில் அழைத்து, அர்ஜென்டினா விசுவாசிகள் தன்னை வாழ்த்துவதற்காக உரோமைக்குப் பயணம் செய்துவரவேண்டாம், மாறாக அப்பணத்தை ஏழைகளுக்கும், தேவையில் இருப்போருக்கும் கொடுக்குமாறு அனைத்து ஆயர்களிடமும் கூறுமாறுச் சொன்னார் எனவும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.