2013-03-15 16:56:41

அனைத்துலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் திருத்தந்தை பிரான்சிஸ்க்காகச் செபம்


மார்ச்,15,2013. திருத்தந்தை பிரான்சிஸ், நீதி மற்றும் அமைதியின் திருப்பணியை ஏற்கும் இவ்வேளையில் அவரது நல்ல உடல்நலம் மற்றும் வலிமைக்காக அனைத்துக் கிறிஸ்தவ சபையினரும் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார் WCC என்ற அனைத்துலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் பொதுச் செயலர் பாஸ்டர் Olav Fykse Tveit.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தேர்தலையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள பாஸ்டர் Tveit, கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்வில் இத்தேர்தல் திருப்புமுனையாக இருந்தாலும், பிற கிறிஸ்தவ சபைகள் மற்றும் பிற மதத்தவர்மீதும் தாக்கத்தைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
எளிமையான வாழ்க்கைமுறையை வாழ்ந்து சமூகநீதி மற்றும் ஏழைகளை முன்னேற்றுவதில் தாகம் கொண்டிருக்கும் திருஅவையின் இந்தத் தாழ்மையான பயணியோடு சேர்ந்து, தாங்களும் நீதி மற்றும் அமைதியைத் தேடும் வழியில் தங்களை அர்ப்பணிப்பதாகவும் WCC மன்றத்தின் பொதுச் செயலர் கூறியுள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவையோடு தாங்கள் தொடர்ந்து ஒத்துழைக்கவிருப்பதாகவும், வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரியக் குடியரசின் Busanல் இடம்பெறவிருக்கும் WCCன் பொதுப்பேரவையில் கத்தோலிக்கத் திருஅவையின் பிரசன்னத்தைத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.