2013-03-14 16:54:27

திருத்தந்தை பிரான்சிஸ் தோன்றிய முதல் மணித்துளிகளிலேயே மாற்றங்களை மக்கள் அறிய முடிந்தது - திருப்பீடப் பேச்சாளர்


மார்ச்,14,2013. புனித பேதுரு பசிலிக்காவின் மேல்மாடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் தோன்றிய முதல் மணித்துளிகளிலேயே ஒரு சில மாற்றங்களை மக்கள் அனைவரும் அறிய முடிந்தது என்ற கூற்றுடன் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi இவ்வியாழனன்று செய்தியாளர்கள் கூட்டத்தை ஆரம்பித்தார்.
சிஸ்டின் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவர் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் அங்கு நிலவிய இரகசிய காப்பு உறுதிகள் தளர்த்தப்பட்டன என்பதால், அதற்குப் பின் நடந்த ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்ள விழைகிறேன் என்று அருள்தந்தை Lombardi தெரிவித்தார்.
அதாவது, தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் கர்தினால், திருத்தந்தைக்கென அமைக்கப்பட்டிருக்கும் நாற்காலியில் சென்று அமர்வார். அவருக்கு முன் ஏனைய கர்தினால்கள் அனைவரும் வணங்கி தங்கள் கீழ்ப்படிதலைத் தெரிவிப்பர்.
இம்முறையோ, கர்தினால் Bergoglio தலைமைப் பொறுப்பை ஏற்றபின், திருத்தந்தைக்கென அமைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்வதற்குப் பதிலாக, நின்றபடியே ஏனைய கர்தினால்களின் வணக்கத்தைப் பெற்றார் என்பதை அருள்தந்தை Lombardi சிறப்பாகக் குறிப்பிட்டார்.
புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றுக் கொண்டதும், பல்வேறு ஊடகங்கள் இவரை முதலாம் பிரான்சிஸ் என்று அழைக்கின்றனர். இது தற்போது தேவையில்லை என்றும், பின்னொரு காலத்தில் மற்றொருவர் திருத்தந்தையாகும்போது, பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றால், அப்போது இந்தத் திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் என்றும், அடுத்தவர் இரண்டாம் பிரான்சிஸ் என்றும் அழைக்கப்படுவர் என்றும் விளக்கமளித்தார் அருள்தந்தை Lombardi.
மார்ச் 1ம் தேதி முதல், திருத்தந்தை இல்லத்தில் மூடப்பட்ட கதவுகளின் மீது இதுவரை வைக்கப்பட்டிருந்த முத்திரைகளை இவ்வியாழன் மாலை சிஸ்டின் சிற்றாலயத்தில் கதினால்களுடன் நடைபெற்ற திருப்பலிக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் நீக்கினார்.








All the contents on this site are copyrighted ©.