2013-03-14 17:03:07

அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள 195 மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்களும், மக்களும் திருத்தந்தைக்கு முழு ஆதரவு அளிப்பர் - கர்தினால் Timothy Dolan


மார்ச்,14,2013. புதியத் திருத்தந்தை 'பிரான்சிஸ்' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது, திருஅவை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமைத்துள்ளது என்று அமெரிக்க ஆயர்கள் பேரவைத் தலைவர் கர்தினால் Timothy Dolan கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் ஒற்றுமைக்குச் சிறந்ததோர் அடையாளம் என்று தன் செய்தியில் கூறிய கர்தினால் Dolan, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள 195 மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்களும், மக்களும் திருத்தந்தைக்கு முழு ஆதரவு அளிப்பர் என்ற உறுதியையும் வெளியிட்டார்.
உரோமையின் ஆயராகவும், அகில உலகத் திருஅவையின் தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் கத்தோலிக்கச் சமுதாயம் அனைத்தும் தன் செபங்களையும் ஆதரவையும் கூறுவதாக, இப்பேரவையின் தலைவர் பேராயர் Vincent Nichols செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
லத்தீன் அமெரிக்காவின் முதல் திருத்தந்தை, இயேசு சபையின் முதல் திருத்தந்தை, முதலாம் பிரான்சிஸ் என்று பல வழிகளிலும் முதன்மை இடத்தை பிடித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், சமுதாய நீதி என்ற பின்னணியிலிருந்து வந்திருப்பது நம்பிக்கை தருகிறது என்று ஸ்காட்லாந்து ஆயர் பேரவையின் தலைவர் Philip Tartaglia செய்தி அனுப்பியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.